Skip to main content

கூடைப்பந்து போட்டி; கரூர் அணியை வீழ்த்தி மதுரை அணி முதலிடம்!

Published on 29/03/2022 | Edited on 29/03/2022

 

Madurai police team won basketball tournament karur

 

கரூரில் நடைபெற்ற மாநில அளவிலான கூடைப்பந்து போட்டியில் மதுரை காவல்துறை அணி முதல் பரிசை பெற்று சுழற்கோப்பையையும் 15 ஆயிரம் ரொக்கப் பரிசையும்  பெற்றது.

 

கரூர் டெக்ஸ் சிட்டி கூடைப்பந்து கழகம் சார்பில் 5 வது மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. இப்போட்டிகளை கரூர் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் தொடங்கி வைத்தார். இதில் தமிழகத்தில் உள்ள 14 மாவட்டத்திலிருந்து 24 அணிகள் கலந்து கொண்டன. நாக்-அவுட் முறையில் நடைபெற்ற போட்டிகளின் இறுதி ஆட்டம் இன்று (29.3.2022) நடைபெற்றது.

 

இந்த போட்டியில் மதுரை காவல்துறை அணி மற்றும் கரூர் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் மதுரை காவல் துறையினர் தொடக்கம் முதலே தொடர்ந்து அதிக புள்ளிகள் எடுத்து முன்னிலை வகித்தனர். இறுதியாக மதுரை காவல்துறை அணி 54 : 36  என்ற புள்ளிகள் கணக்கில் கரூர் அணியை வீழ்த்தி  முதல் பரிசை தட்டிச் சென்றது.  முதல் பரிசு பெற்ற மதுரை காவல்துறை அணிக்கு கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் சுழற்கோப்பையையும்,  15 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசினை வழங்கினார். இரண்டாவது இடம் பெற்ற கரூர் அணிக்கு  சுழற்கோப்பை  மற்றும் 10 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இது மோடியின் வெட்கக்கேடான செயல்” - திருச்சி சிவா விமர்சனம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Trichy Siva critcized This is a shameful act by Modi

கரூர் மாவட்டம்,  கரூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும், காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய திருச்சி சிவா, “இந்தத் தேர்தலானது மிக முக்கியமான ஜனநாயகத் தேர்தல். மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் தேர்தல் நடைபெறுமா என்று சந்தேகம் உள்ளது. மதச்சார்பற்ற அனைவரும் சகோதரர்களாய் உள்ள நிலையில், மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் ஒற்றை மதத்தைச் சார்ந்த ஆட்சியாக இருக்கும். ஜனநாயகமானது காணாமல் போய்விடும். கடந்த 2016ஆம் ஆண்டு 60 ரூபாய்க்கு விற்ற பெட்ரோல் தற்போது 100 ரூபாய்க்கு மேல் விற்று வருகிறது. மோடி ஆட்சிக் காலத்தில் 108 முறை பெட்ரோல், டீசல் கேஸ், விலையினை உயர்த்தியுள்ளது.

ஆண்டிற்கு இரண்டு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கித் தருவதாக பிரதமர் மோடி கூறினார். ஆனால் இதுவரை ஏதும் செய்யவில்லை. நான்கு கோடி இளைஞர்கள் வேலை வாய்ப்பின்றி தவித்து வருகின்றனர். 80 கோடி பேர் தினமும் ரேஷன் கடையில் வரிசையில் நின்று பொருள் வாங்குகிறார்கள். 22 கோடி பேர் இரவு உணவு இல்லாமல் உறங்குகிறார்கள். பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைந்த நாடு என்று கூறிக்கொள்ளும் மோடியின் வெட்கக்கேடான செயல்.

விவசாயக் கடன், மாணவர்களுக்கான கல்விக் கடன்களை ரத்து செய்யாத மோடி அரசு, கார்ப்பரேட் பெரும் முதலாளிகளுக்கு பல்லாயிரக்கணக்கான கோடியினை தள்ளுபடி செய்திருக்கிறது. இந்தியா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் போதும், விவசாயக் கடன் மற்றும் கல்விக் கடன்கள் ரத்து செய்யப்படும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கித் தரப்படும்” என்று கூறினார்.

Next Story

“டீ குடிப்பவன் கூட அவரைத் திரும்பி பார்க்கவில்லை” - வேட்பாளர் சரவணனை ஆதரித்து செல்லூர் ராஜு

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Sellur Raju supporting candidate Saravanan and critcizing amitshah

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறும் இந்த மக்களவைத் தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மக்களவைத் தேர்தல் நடைபெற இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், தி.மு.க, அதிமுக, காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களைத் தீவிரப்படுத்தி வருகின்றன.

அந்த வகையில், மதுரை மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பாக மருத்துவர் சரவணன் போட்டியிடுகிறார். இந்த நிலையில், மதுரையில் வசிக்கும் வட மாநிலத்தவர்களிடம் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து, அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வாக்கு சேகரித்தார். அப்போது, ராஜஸ்தானை சேர்ந்தவர்கள் அணிவிக்கும் தலைப்பாகையோடு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, வேட்பாளர் சரவணன் ஆகியோர் வாக்கு சேகரித்தனர்.

இதனைத் தொடர்ந்து, செல்லூர் ராஜு, அதிமுக வேட்பாளர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர். அப்போது செல்லூர் ராஜுவிடம், “அதிமுகவும், திமுகவும் மாறி மாறி ஊழல் செய்துவிட்டதாக அமித்ஷா கூறியிருக்கிறாரே? எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த செல்லூர் ராஜு, “அமித்ஷா ஏதோ பேச வேண்டும் என்பது போல் பேசுகிறார். திராவிட இயக்கங்கள் 1967-ல் ஆட்சிக்கு வந்தது. அன்றைக்கு மத்தியில் ஆளுகின்ற காங்கிரஸ் கட்சி, தமிழ்நாட்டு மக்களை எலிக்கறி சாப்பிட வேண்டும் என்றும் ஒரு வாரத்தில் ஒரு நாள் விரதம் இருக்க வேண்டும் என்றும் கூறினார்கள். மாணவர்கள் படிக்கின்ற விடுதிகளில் கூட மாணவர்களுக்கு ஒரு வேளை சாப்பாடு கிடையாது. ஏனென்றால் உணவு பற்றாக்குறை.

இந்த மாதிரி நிலைமை எல்லாம் அப்போது இருந்தது. மொழியாலும், கலாச்சாரத்தாலும் தமிழ்நாடு தனித்துவம் பெற்றதன் அடிப்படையில், பேரறிஞர் அண்ணா தான் தமிழ்நாடு என்று பெயர் வைத்தார். தமிழ்நாடு என்று பெயர் வைத்ததற்கு பிறகு திராவிட இயக்கங்கள் தான் தமிழ்நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறது. இந்த திராவிட இயக்கங்கள் தான் ஏழை எளிய மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் செயல்படுத்துகிற திட்டங்களைத் தான் பிற மாநிலங்களில் பின்பற்றுகிறார்கள். அம்மா உணவகம் ஆந்திரா, தெலுங்கானா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது

தமிழ்நாட்டில் தான் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. சிறு, குறு தொழில்களில் இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் முதல் மாநிலமாக இருக்கிறது. இங்கே வருகிற நிதியில் தான் குஜராத், பீகார் போன்ற மாநிலங்களுக்கு நிதி தருகிறார்கள். எங்கள் ஆட்சியில் ஊழல் நடக்கவில்லை. ஊழலுக்காக திமுக ஆட்சி தான் கலைக்கப்பட்டது. அவர் உண்மையாக எங்களை பற்றி குறை சொல்லவில்லை. தி.மு.க பற்றி குறை சொல்ல வேண்டும் என்பதற்காக இப்படி மாற்றி சொல்லி இருக்கிறார். மதுரையில் அமித்ஷா ரோட் ஷோ நடத்தினார். ஆனால் பாவம் அங்கு டீ குடிப்பவன் கூட அவரைத் திரும்பி பார்க்கவில்லை. அவர் மட்டுமே கை காட்டிக் கொண்டு போனார்” என்று பேசினார்.