Published on 09/05/2020 | Edited on 09/05/2020
மதுரை அருள்மிகு கள்ளழகர் கோவிலின் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக, சித்திரை மாதத்தில் பத்து நாட்கள் நடைபெறும். இந்தாண்டு கரோனா வைரஸ் பாதிப்பால் கள்ளழகர் சித்திரை திருவிழா நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டதாக கோவில் நிர்வாகம் அறிவித்தது.
இதனையடுத்து பக்தர்கள் அனுமதியின்றி, சிவாச்சாரியார்கள் மட்டும் பங்கேற்கும் வகையில் நேற்று காலை 6மணிமுதல் இரவு வரை கோவில் ஆண்டாள் சன்னதி முன்பாக மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மேடையில் கள்ளழகர் எதிர்சேவை மற்றும் தங்க குதிரை வாகனத்தில் பச்சை பட்டுடுத்தி எழுந்தருளும் நிகழ்வு நடைபெற்றது.பின்னர் சேஷ வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர் கருட வாகனத்தில் எழுந்தருளி மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்வும் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து அம்பி பட்டர் மோட்ச புராணம் வாசி்க்கும் நிகழ்வு, அதனைத் தொடர்ந்து சுவாமிக்கு பல்வேறு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டது. இதனையடுத்து இரவு 8 மணிக்கு மேல் சுவாமி பல்வேறு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பூப்பலக்கில் எழுந்தருளினார். அத்துடன் 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும் சித்திரை திருவிழா நிகழ்ச்சிகள் மிக எளிமையாக பக்தர்களின் ஆராவாரம் இன்றி நடைபெற்று நிறைவடைந்தது.