சென்னையை தொடர்ந்து மதுரையில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், பத்துநாட்கள் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் நேற்று மட்டும் 157 பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். தற்போது மொத்த பாதிப்பு 900த்தை தாண்டியுள்ளது. கரோனா சென்னை போன்று மதுரையிலும் அதிவேகமாகப் பரவி வருகிறது. இந்நிலையில் திமுக உட்பட எதிர்க் கட்சிகள் தொடர்ச்சியாக போராட்டங்கள் நடத்தி வந்தனர். அண்மையில் கலெக்டர் அலுவலகம் முன்பு எம்எல்ஏ மூர்த்தி, எம்பி வெங்கடேசன், பி.டி. தியாகராஜன் ஆகியோர் போராட்டம் நடத்தினர்.
இதைத்தொடர்ந்து கரோனா தடுப்பு சிறப்பு கண்காணிப்பாளராக தர்மேந்திர யாதவ் நியமிக்கப்பட்டார். அவர் நியமிக்கப்பட்டு ஒரு வாரம் ஆகியும் பணியில் சேராமல் இருந்து வந்த நிலையில் எம்பி வெங்கடேசன் இதுகுறித்து கலெக்டரிடம் மீண்டும் கோரிக்கை வைத்தார். அதைத்தொடர்ந்து திடிரென தர்மேந்திர யாதவை மாற்றி சந்திரமோகன் ஐ.ஏ.எஸ்-ஐ சிறப்பு கண்காணிப்பு அதிகாரியாக நியமித்தனர்.
இதைதொடர்ந்து தற்போது மதுரையில் முழு ஊரடங்கு அறிவித்துள்ளனர். இது மதுரை மக்களிடையே அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஊரடங்கை சாக்காக வைத்து போலிஸார் அதிகாரத்தை கையில் எடுத்து வருவோர் போவோரை அடிப்பது, அதிகமாக அபராதம் வசூலிப்பது போன்றவற்றை தொடங்கி விடுவார்கள் இதை கண்டுதான் அதிக பயமாக இருக்கிறது என்கின்றனர் பொது மக்கள்.