இளங்கலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு, செப்டம்பர் மாதம் 12 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் தற்போது மாணவர்களிடமிருந்து பெறப்பட்டு வருகிறது. இந்நிலையில் இளங்கலை நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை தேசிய தேர்வு முகமை, ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை நீட்டித்து அறிவித்திருந்தது.
இந்நிலையில் தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை இந்த முறை குறைந்துள்ளதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்திலிருந்து இதுவரை நீட் தேர்விற்கு 6,412 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளதாக தெரிவித்துள்ள பள்ளிக்கல்வித்துறை, மாநிலத்தில் அதிகபட்சமாக மதுரை மாவட்டத்தில் 505 பேரும், குறைந்தபட்சமாக ராமநாதபுரத்தில் 9 பேரும் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளதாக தெரிவித்துள்ளது. கரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஒரு மாணவர் கூட நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் கல்வியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சில மாதத்திற்கு முன்பு தமிழகத்தில் நீட் தேர்வால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆராய நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் தமிழக அரசு குழு அமைத்து ஆய்வு மேற்கொண்டதோடு, பெற்றோர்கள் மாணவர்களிடம் கருத்தும் கேட்டு நீட் தேர்வு தொடர்பான ஆய்வு அறிக்கையை அக்குழு அரசிடம் சமர்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.