குமரி மாவட்டம் மார்த்தாண்டம் வெட்டுவெந்நி பகுதியை சோ்ந்த ஷாமிலி (23) பிஎஸ்சி நா்சிங் முடித்து விட்டு தா்மபுரியில் உள்ள ஒரு மருத்துவமனையில் வேலை பார்த்துவந்தார். அதே மருத்துவமனையில் ஏ.சி மெக்கானிக்காக வேலை பார்த்துவந்த ராஜூவும் நண்பா்களாக பழகி பின்னா் காதலா்களாக மாறினார்கள். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சோ்ந்தவா்கள் என்பதால் காதல் திருமணத்துக்கு பெற்றோர்கள் சம்மதிப்பார்களா என்ற கேள்வி இருவருக்குள் எழுந்தது. அதேபோல் காதல் விஷயம் வெளியே தெரிந்தால் தன்னை அதே மருத்துவமனைக்கு வேலைக்கு பெற்றோர்கள் அனுப்புவார்களா? என்ற அச்சமும் காதலிக்கு இருந்தது.
இதற்கு ஒரே தீர்வு நண்பா்கள் சொன்னதுபோல் அலைபாயுதே திரைப்படம் பாணியில் திருமணம் செய்துகொண்டு பெற்றோருக்கு தெரியாமல் இருவரும் கணவன் மனைவியாக வாழுவது என்று முடிவு எடுத்து நண்பா்கள் உதவியுடன் தா்மபுரியில் ஒரு கோவிலில் வைத்து கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் திருமணம் செய்து கொண்டு கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தனா். மேலும் பெற்றோர்கள் சம்மதத்துக்கு பிறகு குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்ற முடிவும் எடுத்தனர்.
இந்தநிலையில் கரோனா பரவ தொடங்கியதையடுத்து சொந்த ஊருக்கு வந்தார் ஷாமிலி, மேலும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கு தடை விதித்ததோடு இ- பாஸ் முறையை அரசு நடைமுறைபடுத்தியதால் ஷாமிலியும், ராஜும் சந்திக்க முடியாமல் போனது. இந்த நிலையில் ஷாமிலிக்கு அவரின் பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்க முடிவு செய்து. களியக்காவிளை அருகே திருத்துவபுரத்தை சோ்ந்த ஒருவருக்கு ஷாமிலியை பேசி முடித்தனா்.
அப்போது இதற்கு ஷாமிலி தனக்கு திருமணம் ஆகி விட்டது என்பதை கூறாமல் மறைமுகமாக தன்னுடைய திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தார். ஆனாலும் பெற்றோர்கள் அவரை மிரட்டி திருமணத்துக்கான தடபுடலான ஏற்பாடுகளை செய்து வந்தனா். இந்த விஷயத்தை ஷாமிலி தா்மபுரியில் இருக்கும் ராஜுக்கு கூறினார். ராஜு மார்த்தாண்டம் வந்து ஷாமிலியை கூட்டி செல்ல இரண்டு முறை இ- பாஸ்க்கு முயற்சி செய்து கிடைக்கவில்லை. இதனால் ராஜு ஷாமிலியிடம் நமக்கு திருமணம் ஆன விஷயத்தை சொல்லிவிடாதே தெரிந்தால் உன்னை ஊரை விட்டு கடத்தி விடுவார்கள் அவா்கள் சொல்வதுபோல் நடந்துகொள். கடைசி நிமிடத்திலாவதுவந்து உன்னை மீட்டுவிடுவேன் எனத் தெரிவித்துள்ளார்.
ஷாமிலியும் அதேபோல் நடந்து கொண்டார். திருமணத்துகான வரவேற்பு நிகழ்ச்சி 13-ம் தேதி முடிந்த நிலையில் நேற்று முந்தினம் 14-ம் தேதி காலையில் திருமணம் நடக்க இருந்தது. இந்நிலையில் மார்த்தாண்டம் மகளீா் போலீசுடன் வந்த ராஜு தங்களுக்கு திருமணம் நடந்ததை கூறி, ஷாமிலி வீட்டாருக்கும் ஷாமிலியை கரம் பிடிக்க வந்தவருக்கும் அவருடைய வீட்டாருக்கும் அதிர்ச்சி கொடுத்து அதற்கான ஆதாரங்களையும் காண்பித்தார். இதையடுத்து போலீசார் தலையிட்டு இரு குடும்பத்தினருடன் பேசி அதே மேடையில் ராஜுக்கும் ஷாமிலிக்கும் திருமணத்தை நடத்தி வைத்தனர்.