ஆவணி மாதம் முதல் முகூர்த்த நாளான நேற்று (20/08/2021) தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் திருமணங்கள் மற்றும் விஷேச நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கோயில்கள் மூடப்பட்டிருந்த நிலையில் கோயில் வாசலில் திருமணங்கள் நடைபெற்றது. குறிப்பாக, தங்கள் காதலை பெற்றோர்கள் ஏற்காததால் காதல் ஜோடிகள் காவல் நிலையத்தில் குவிந்தனர். இந்த நிலையில், அவர்களுக்கு காவல் நிலையங்களிலேயே காவல்துறையினர் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. அதேபோல், வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்துக் கொண்டு, பாதுகாப்பு கேட்டு காவல்நிலையங்களில் காதல் ஜோடிகள் தஞ்சமடைந்த நிகழ்வும் ஒருபுறம் நடைபெற்றது.
அந்த வகையில், திண்டுக்கல் மாவட்டம், வட மதுரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகளான பிலாத்து கம்பிளியம்பட்டியைச் சேர்ந்த காதல் ஜோடி உள்பட ஏழு ஜோடியினர் தஞ்சமடைந்தனர். இதனால் காவல்நிலையம் திருமண மண்டபம் போல திக்குமுக்காடியது. தொடர்ந்து, ஏழு காதல் ஜோடிகளுக்கு காவல்துறையினர் திருமணம் செய்து வைத்தனர்.