Skip to main content

ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டும் உத்தரவில் திடீர் மாற்றம்... லாரி அதிபர்கள் குஷி!

Published on 09/09/2021 | Edited on 09/09/2021

 

lorry owners association president says

 

கனரக வாகனங்களில் குறிப்பிட்ட நிறுவனங்கள் தயாரிக்கும் ஒளிரும் ஸ்டிக்கர்களை மட்டுமே ஒட்ட வேண்டும் என்ற உத்தரவைத் தளர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதால், லாரி உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

தமிழ்நாட்டில் லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களுக்கு ஆர்டிஓ அலுவலகங்களில் எஃப்சி (தகுதிச்சான்றிதழ்) பெறும்போது, குறிப்பிட்ட நிறுவனங்கள் தயாரிக்கும் ஒளிரும் ஸ்டிக்கரை (ரிஃப்ளக்டிங் ஸ்டிக்கர்) மட்டுமே ஒட்ட வேண்டும் என கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. இதனால் லாரி உரிமையாளர்களுக்கு கூடுதல் செலவு ஏற்பட்டு பாதிக்கப்பட்டனர்.

 

இந்த உத்தரவை நீக்கக் கோரி மத்திய, மாநில அரசுகளிடம் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் சார்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது மத்திய அரசு, குறிப்பிட்ட நிறுவனங்களிடம் இருந்து ஒளிரும் ஸ்டிக்கர் வாங்க வேண்டும் என்ற மாநில அரசின் உத்தரவுக்கு விலக்கு அளித்துள்ளது.

 

ஏஏஆர்ஐ, ஐசிஏடி ஆகியவற்றின் அங்கீகாரத்துடன் ஏஐஎஸ் 090 தரத்துடன் கூடிய எந்த ஒரு கம்பெனியிலும் ஒளிரும் ஸ்டிக்கர் வாங்கலாம் என உத்தரவிட்டுள்ளது. இதனால் லாரி உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

இது தொடர்பாக தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளன செயலாளரும், நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவருமான வாங்கிலி செய்தியாளர்களிடம் கூறியது, "குறிப்பிட்ட நிறுவனங்கள் தயாரித்த ஒளிரும் ஸ்டிக்கர்களை மட்டுமே வாங்க வேண்டும் என்ற உத்தரவால் லாரி உரிமையாளர்களுக்கு கூடுதல் செலவு ஏற்பட்டது.

 

மத்திய அரசின் அனுமதி பெற்ற பல நிறுவனங்கள் ஒளிரும் ஸ்டிக்கர்களை தயாரிக்கிறது. அனைத்து நிறுவனங்களின் ஸ்டிக்கரைப் பயன்படுத்தும்போது அதன் விலை குறையும். அதனால் இக்கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்திவந்தோம். 

 

தற்போது மத்திய அரசு பிறப்பித்துள்ள உத்தரவை தமிழக அரசின் போக்குவரத்து ஆணையர் உடனடியாக தமிழகத்தில் உள்ள அனைத்து ஆர்டிஓ அலுவலகங்களிலும் நடைமுறைப்படுத்த வேண்டும்.

 

இந்த உத்தரவு நடைமுறைக்கு வரும்போது ஆர்டிஓ அலுவலகங்களில் எஃப்சி பெற லாரி உரிமையாளர்களுக்கு 1,500 முதல் 4,500 ரூபாய் வரை கூடுதல் செலவு குறையும்." இவ்வாறு வாங்கிலி கூறினார். 

 

 

சார்ந்த செய்திகள்