தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் களம் பரபரப்பாக உள்ள நிலையில், வேட்புமனுத் தாக்கல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தற்போது வரை அரசியல் கட்சியினரிடையே தொகுதிப் பங்கீடு, கூட்டணி பேச்சு வார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அனைத்துக் கட்சிகளும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன. ஆளும் கட்சியான திமுகவுடன் காங்கிரஸ், விசிக, சிபிஎம், சிபிஐ, தவாக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணிகளாக அங்கம் வகிக்கின்றன. அதிமுக கூட்டணியில் பெரிய கட்சிகள் என்றும் எதுவும் இல்லை, ஏறக்குறைய தனியாக நிற்பதைப் போன்று உள்ளாட்சி தேர்தலில் களம் இறங்குகிறது.
இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக வேட்புமனுத்தாக்கல் செய்யப்பட்டு வந்த நிலையில், 4ம் தேதியான இன்று வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாளாகும். நேற்று இரவு வரை முக்கிய கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து வந்த நிலையில், இன்று அதிக அளவிலான வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.