தமிழ்நாட்டில் புதிதாக உருவாக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்குத் தற்போது உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான அறிவிப்பை வெளிட்ட தேர்தல் ஆணையம், தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளைத் துரித கதியில் மேற்கொண்டுவருகிறது. இந்நிலையில், தேர்தல் தொடர்பாக திமுக தரப்பு முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியதாவது, "உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனுக்களைத் திமுக மாவட்டச் செயலாளரிடமோ அல்லது அண்ணா அறிவாலயத்திலோ ஒப்படைக்கலாம். மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் பதவிக்கு ரூ. 10 ஆயிரம், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினருக்கு ரூ. 5 ஆயிரம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர், பெண்கள் உள்ளிட்டவர்கள் பாதி தொகையைக் கட்டணமாக செலுத்த வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக கூட்டணிக் கட்சிகளுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்றும் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.