தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் வட்டம் பூதலபுரம் கிராமத்தில் இராமசாமித் தேவர்-உமையம்மாள் தம்பதியருக்கு 21-08-1911 ஆம் ஆண்டு மூத்த மகனாய் பிறந்தவர் ஆர்.வேலுச்சாமித்தேவர். தனது மாணவப் பருவத்திலேயே அரசியல், மக்கள் இயக்கம், மக்கள் நற்பணி ஆகியவற்றில் தனது வீரத்தையும், கொள்கை தெளிவையும், மண்வாசனையையும் வெளிப்படுத்தினார். தான் பிறந்த ஊரான பூதலபுரத்தில் கல்வி கற்க பள்ளிக்கூட வசதி இல்லாததால், பக்கத்து கிராமமான சின்னய்யபுரத்தில் கிருத்துவ சபையினரால் நடத்தப்பட்ட சி.எஸ்.ஐ. தொடக்கப்பள்ளியில் கல்வி கற்றார். அந்தக் காலத்தில் ஊர் விட்டு ஊர் செல்ல பேருந்து வசதி இல்லை. அதனால் மாட்டுவண்டியில் பயணம் செய்தே தினசரி பள்ளிக்குப் போய் வந்தார்.
பின்னர் ஆறாம் வகுப்பில் சேர்வதற்கு கிருத்துவ போதகர் அவரை மதுரை யூனியன் கிருத்துவ பள்ளியில் சேர்த்தார். மாணவப் பருவத்திலேயே அவரின் ஆர்வம் அரசியல் காற்றை சுவாசிக்கத் தொடங்கியது. 1927ஆம் ஆண்டு காந்தியடிகள் மதுரைக்கு வந்திருந்தார். அவருடைய வருகை மதுரை மாவட்டத்திலேயே மிகப் பெரிய எழுச்சியை ஏற்படுத்தியது. அந்த எழுச்சியில் தன்னையும் இணைத்துக்கொண்டார். எஸ்.எஸ்.எல்.சி வரை படித்து முடித்ததும் சிவகங்கை பழயனூரில் பிர்கா அலுவலராக பணிபுரிந்து வந்தார். இந்த காலகட்டத்தில் அவர் காங்கிரஸ் இயக்கத்தில் தொடர்பு கொண்டிருந்தார். காங்கிரஸ் இயக்க நடவடிக்கைகளில் தன்னை தீவிரமாக இணைத்துக்கொண்டார். இந்நிலையில் மக்கள் வரிப்பணம் கட்டவில்லை என்பதற்காக அவர்களது வண்டி மாடுகள், சட்டி பானைகள் ஜப்தி செய்யப்பட்டன.
கதவுகள் மற்றும் ஜன்னல்களைக் கூட விட்டு வைக்கவில்லை. வருவாய் அலுவலராக இருந்த அவருக்கு அந்த நடவடிக்கை மனதை உறுத்தின. தனது வேலையின் மீது வெறுப்பு ஏற்பட்டது. அதன் விளைவாக வேலையைத் துறந்து விட்டு சொந்த ஊரான பூதலபுரம் வந்து சேர்ந்தார். 1937ஆம் ஆண்டு நாகலாபுரத்தில் காங்கிரஸ் மாநாடு நடைபெற்றது. தென்னாட்டுச் சிங்கம் என்று வர்ணிக்கப்படும் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அந்த மாநாட்டை தலைமை ஏற்று நடத்தினார். அவர் தனது தலைமையுரையில் யுத்த நிதிக்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்களுக்கு உணர்ச்சியூட்டினார். இந்த மாநாடு வெற்றி பெற ஆர்.வேலுச்சாமித் தேவர் தீவிரமாக பணியாற்றினார். 1942 ஆம் ஆண்டு ‘வெள்ளையனே வெளியேறு’ என்ற உரையுடன் தொடங்கியது. நாட்டில் வன்முறைகள் தலை காட்டியது. இந்தக் கால கட்டத்தில் பல வழக்குகள் தொடுக்கப்பட்டு, பலரும் சிறைச்சாலைக்குள் தள்ளப்பட்டனர்.
இந்த வழக்கில் ஆர்.வேலுச்சாமித்தேவரையும் விட்டு வைக்கவில்லை. கைது செய்யப்பட்டு போலீஸ் வேனில் ஏற்றப்பட்டார். வேனில் ஏறும் முன் அவரது தாயார் ‘ஜெயம் பெற்று வாடா மகனே’ என்று வாழ்த்தி அனுப்பினார். தஞ்சை சிறையில் அடைக்கப்பட்டார். இவருடன் சிறையில் இருந்தவர்களில் முக்கியமானவர்கள் நூறு வயதைக் கடந்தும் இன்றும் நம்மோடு இயக்கப்பணியாற்றி வரும் தோழர் என்.சங்கரய்யா, ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார், பின் நாளில் குடியரசுத் தலைவராக இருந்த ஆர்.வெங்கட்ராமன், மதுரை வழக்கறிஞர் வைத்தியநாதன் மற்றும் பின் நாளில் தமிழக தலைமைச் செயலாளராக பணியாற்றிய கா.திரவியம் ஆகியோர் முக்கியமானவர்கள். 1942 முதல் 1944 வரை தஞ்சையில் இருந்தார். 1944ஆம் ஆண்டு இறுதியில் தஞ்சை சிறையில் இருந்து விடுதலை ஆனார். சிறையில் இருந்த நாட்களில் கம்யூனிஸ்ட்களின் தொடர்பால் அவர்களோடு உரையாடியும், அவர்கள் தந்த புத்தகங்களைப் படித்தும் கம்யூனிஸ்டாக சிறையில் இருந்து வெளியே வந்தார்.
அவரது பணியும், திறமையும் அவரை திருநெல்வேலி மாவட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் பொறுப்பாளராக்கியது. கட்சிப் பணியைச் செய்த வண்ணம் விவசாயச் சங்கம் பணிகளிலும் தீவிரம் காட்டினார். நெல்லை சதி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் காவலர்கள் நடத்திய தாக்குதல்கள் கடுமையாக இருந்தது. அனைத்தையும் தாங்கி நின்று கட்சிக்காக தன் வாழ்க்கையே அர்ப்பணித்தார். விவசாயச் சங்கப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டதால் இவரை தமிழ்நாடு விவசாயச் சங்கத்தின் மாநில துணைத் தலைவராக்கினர். இந்த காலத்தில் களக்காடு மற்றும் சிவகிரி போன்ற விவசாய பெருங்குடி மக்கள் வாழும் பகுதிகளில் விவசாயச் சங்கத்தைக் கட்டி இறுதிக்காலம் வரை சிறப்பாக பணியாற்றி வந்தார்.
சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் தலித்துகளுக்கு ஒரு கிணறும் மற்ற சமூகத்தினருக்கு ஒரு கிணறும் எனப் பல காலமாக இருந்து வந்ததை மாற்றி அனைத்து சமூகத்தினருக்கும் ஒரே கிணறு என்று மாற்றி சமத்துவத்தை உருவாக்கினார். கிராமத்தில் உள்ள இளைஞர்களை ஒருங்கிணைத்து அவர்களை நல்ல வழியில் நடக்கவும் முதல் முதலாகப் பாரதியார் பெயரில் ஒரு வாசகசாலை ஆரம்பித்தார். இரண்டு முறை ஊராட்சி மன்றத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஊராட்சி மன்றக் கூட்டம் நடக்கும் போது தலித் உறுப்பினர்களைச் சரிசமமாக உட்கார வைத்து ஊராட்சி மன்றக் கூட்டத்தை நடத்தினார். பூதலபுரம் கரிசல் பூமி, மழைக் காலங்களில் சாலைகள் மறைந்து சகதிகளாகக் காட்சி தரும். எனவே தான் உருவாக்கிய வாசகசாலை மூலமாக இளைஞர்களின் உதவியோடு சாலை அமைத்து இருபுறமும் புளியமரம் மற்றும் புங்கை மரம் நட்டு வளர்க்கச் செய்தார்.
அம்மரங்கள் இன்றும் பசுமை இயக்கத்தை நினைவூட்டும் வண்ணம் நிமிர்ந்து நிற்கிறது. இருள்சூழ்ந்த கிராமத்தை ஒளியூட்டும் விதத்தில் மின் வசதி செய்து கொடுக்க உரிய நடவடிக்கை எடுத்து கிராமத்தை ஒளி மயமாக்கினார். கிராமத்து அருகில் ஓடை நீர் வீணாகி கடலில் கலப்பதைக் கண்ட அவர் சென்னை வந்து, கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி) மறைந்த சோ.அழகர்சாமியை அழைத்துக்கொண்டு, அன்றைய விவசாய அமைச்சராக இருந்த மறைந்த முனைவர் கா.காளிமுத்து அவர்களைச் சந்தித்து ஒரு மனுவினைக் கொடுத்து, ஓடை நீர் கடலில் கலப்பதைத் தடுத்து ஒரு அணை கட்டி தண்ணீரைத் தேக்கி வைத்து, பாசன வசதிக்கு வழி வகுத்தார். இது போன்று ஊர்மக்களுக்கு மருத்துவ வசதியை ஏற்படுத்தித் தர தனது ஊரில் சொந்த இடத்தில் ஒரு மருத்துவமனை உருவாக வழி வகுத்தார்.
எட்டயபுரம் ஜமீன் நிலத்தில் விவசாயம் செய்து வந்த விவசாய பெருமக்களைக் காப்பாற்றும் பொருட்டு அது சம்பந்தமான வழக்கை நீதிமன்றம் வரை சென்று வெற்றி பெற்றார். அந்த நிலங்களை நொடிந்து போன விவசாயிகளுக்குப் பிரித்துக் கொடுத்து அவர்களுக்கு நிம்மதியான வாழ்வை அமைத்துக்கொடுத்தார். இளம் வயதிலேயே அரசியல் பிரவேசம் பெற்று, தன் அரசு பதவியையும் உதறித்தள்ளிவிட்டு, பின்னர் கம்யூனிஸ்ட்டாக மாறி வளர்ந்து, புரட்சி வரம் பெற்று, மக்கள் தலைவராக உயர்ந்து நின்ற ஆ.வேலுச்சாமித்தேவர் அவர்கள் 02.08.1982 ஆம் ஆண்டு தனது சுவாசத்தை நிறுத்திக்கொண்டார். எந்த ஆங்கில மாதத்தில் (ஆகஸ்டு) பிறந்தாரோ அதே மாதத்தில் இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
(இன்று தியாகி ஆர்.வேலுச்சாமித்தேவர் 111வது பிறந்தநாள் 21.08.2021)
நிறுவனர்;- க.அய்யாசாமி, எம்.ஏ.
தியாகி ஆர்.வேலுச்சாமி தேவர் நினைவு அறக்கட்டளை, சென்னை-600089.