அரசுப் பள்ளிகளைக் குறை சொல்லிக்கொண்டிருந்த காலம் போய், சில தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களால், அரசுப் பள்ளிகளுக்குப் பெருமையும் சென்றடைவது பாராட்டுக்குரியதே! அப்படி ஒரு நல்லாசிரியராக இருக்கிறார், தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் ஞானராஜ்.
ஸ்ரீவில்லிபுத்தூர், தோப்பூர் பண்ணை, படிக்காசுவைத்தான்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், ஜெயக்குமார் ஞானராஜ் ஒரு நல்ல காரியத்தைத் தொடங்கி வைத்திருக்கிறார்.
அஸ்ஸாம், உத்தரப்பிரதேசம், பீகார் உள்ளிட்ட வடமாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் பலர் அந்தக் கிராமத்தின் அருகிலுள்ள நூற்பாலைகளில் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். இவர்களது குழந்தைகள் பள்ளிக்குச் செல்லாமல், அந்த நூற்பாலைகளுக்கு வெளியே, தங்களது தம்பி, தங்கைகளோடு விளையாடி பொழுதைக் கழித்தபடி சுற்றித் திரிந்தனர். இவர்கள் ஜெயக்குமார் ஞானராஜ் பார்வையில்பட, முயற்சிகளை மேற்கொண்டார். அந்தக் குழந்தைகளின் பெற்றோரும், தங்களது பள்ளி வயதுக் குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்கச் சம்மதித்தனர்.
இதனைத் தொடர்ந்து, அரிசி மற்றும் அரசின் விலையில்லா புத்தகப்பை, சீருடை உள்ளிட்டவற்றை வடமாநிலக் குழந்தைகளுக்கு வழங்கியதோடு, தலா ஆயிரம் ரூபாயும் தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் ஞானராஜ் தந்துள்ளார்.
வடமாநிலங்களைச் சேர்ந்த 6 மாணவ, மாணவியரை அரசுப் பள்ளியில் சேர்த்தது, தமிழக பள்ளிக் கல்வித்துறையின் கல்வி மேலாண்மை தகவல் மையத்தில் இணையதளம் வழியே உறுதி செய்யப்பட்டு, அதற்கான ஒப்புதல் சீட்டும் வழங்கப்பட்டிருக்கிறது. நம்மிடம் தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் ஞானராஜ் “வடமாநில மாணவர்களுக்கு இந்தியில் பாடங்கள் கற்றுக்கொடுப்பதற்கு, மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை மூலம் தன்னார்வலரை நியமிப்பதற்குக் கோரிக்கை வைத்திருக்கிறோம்” என்றார்.