தொடர்ச்சியாக ஒரு மாத காலத்திற்குள், களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக பகுதிகளில் இரண்டு வயதுடைய இரு சிறுத்தைகள் தொடர்ச்சியாக மர்மமான முறையில் மரணமடைந்துள்ளது. இது வேட்டைக்கும்பலின் செயலாக இருக்குமோ? என அச்சப்படுகின்றனர் விலங்கு நல ஆர்வலர்கள்.
![cheetah](http://image.nakkheeran.in/cdn/farfuture/AA5H58YPX1snMdBWuoTdX-kA-2RD_YJvtWiAn6tccs4/1557730133/sites/default/files/inline-images/cheetha-std.jpg)
நெல்லை மாவட்டத்தின் திருக்குறுங்குடி தொடங்கி கடையம் வரை 895 ச.கி.மீ வரை விரிந்து பரவிக்கிடக்கின்றது இந்தியாவின் 17வது புலிகள் காப்பகமான களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம். பல்லுயிர் பெருக்கத்திற்கு புகழ் பெற்ற இந்த காப்பகத்தில் புலி, சிறுத்தை, மான், மிளா, யானை, எருமை மற்றும் எண்ணற்ற அரியவகை விலங்குகள் வசித்து வருகின்றன. தமிழ்நாட்டின் இரண்டாவது காப்பகமான இதில் அம்பாசமுத்திரம், பாபநாசம், முண்டந்துறை மற்றும் கடையம் உள்ளிட்ட வனச்சரகங்கள் உள்ளன. இதில் கடந்த ஏப்ரல் மாதம் 22ம் தேதி பாபநாசம் காப்புக்காடு சொரிமுத்து அய்யனார் பீட் பகுதிக்குட்பட்ட சின்னமைலார் சரகத்தில் உடலில் காயங்களுடன் சிறுத்தை ஒன்று இறந்து கிடந்ததை கைப்பற்றியது வனசரகம். அது போல் 10/05/19 ம் தேதி அம்பாசமுத்திரம் வனச்சரகத்திற்குட்பட்ட சிங்கம்பட்டி பீட் 3 பகுதியில் உருக்குலைந்த நிலையில் ஆண் சிறுத்தையை கைப்பற்றிய வனச்சரகம் பின் அதனை எரியூட்டியது. இறந்த இரு சிறுத்தைகளின் வயதும் இரண்டு மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
"ஒரு மாத இடைவெளியில் களக்காடு முண்டன்துறை புலிகள் காப்பக பகுதிகளில் இரண்டு சிறுத்தைகள் இறந்தது அதிகாரிகளின் அலட்சியத்தைக் காட்டுகின்றது. மேற்கண்ட இப்பகுதிகளில் சரியான ரோந்து கிடையாது. பெயருக்கு சுற்றிவிட்டு தன்னுடைய இருப்பிடத்திற்கே வந்து ஓய்வு எடுக்கும் வனத்துறையினரால் இந்த அலட்சிய உயிரிழப்பு. ஒத்த வயதில் இறந்த இச்சிறுத்தைகள் பல். நகம் உள்ளிட்டவைகளுக்காக வேட்டைக்கும்பலால் வேட்டையாடப்பட்டவையா.? என்பது பற்றி தெரியவில்லை. எனினும் இங்கு வனத்துறையின் ஆசியில் வேட்டைக்கும்பல் இருப்பது அனைவருக்கும் தெரிந்ததே.! களக்காடு முண்டன்துறை புலிகள் காப்பக இயக்குநரின் மேற்பார்வையில் உரிய விசாரணை நடந்தால் குற்றவாளிகள் பிடிபடுவர். உயிரினங்களும் பிழைத்துக்கொள்ளும்" என ஆதங்கத்துடன் கோரிக்கை விடுத்துள்ளனர் விலங்கு நல ஆர்வலர்கள்.