மனிதர்கள் மீதான வளர்ப்பு நாய்களின் பாசமும், வளர்ப்பு நாய்களின் மீதான மனிதர்களின் பாசமும் ஒன்றுக்கொன்று சளைத்ததல்ல. காரணம், நாயை வளர்க்கும் ஒவ்வொரு மனிதனும், தான் செலுத்தும் பாசத்தைக் காட்டிலும் பல மடங்கு நன்றியுணர்வையும், பாசத்தையும் அதனிடமிருந்து பெற்றுத் திளைப்பதுதான். தன்னை முற்றிலும் உணர்ந்த ஒரே ஜீவன், தான் செல்லமாக வளர்க்கும் நாய் மட்டுமே என, குடும்பத்தினரைவிட ஒருபடி மேலாக மனதில் தூக்கிவைத்துக் கொண்டாடுகிறான். அந்த நாய்க்கு ஏதாவது நடந்தால், துடித்துப் போகிறான்.
மேலே குறிப்பிட்டுள்ளது, வளர்ப்பு நாய்கள் அனைத்துக்கும் பொருந்தும் அளவுக்கு, வளர்ப்பவர்களுக்குப் பொருந்தாது. மனிதனுக்கு மனிதன் வளர்ப்பு நாய் மீதான அன்பின் விகிதாச்சாரம் மாறுபடும். சரி, நடப்பு நிகழ்வான வளர்ப்பு நாய்கள் குறித்த விஷயத்துக்கு வருவோம். ஸ்ரீவில்லிபுத்தூர்–தோப்பூரில் வசிக்கும் சிவன்பெருமாள், தனது வீட்டில் நாய்களை வளர்த்து வருகிறார். குருபுத்திரன் என்பவர், ஷிப்ட் முடித்துவிட்டு நள்ளிரவு கடந்து அதே ஏரியாவிலுள்ள தனது வீட்டுக்கு டூவீலரில் சென்றார். சிவன்பெருமாள் வீட்டை குருபுத்திரன் கடந்து சென்றபோது, வளர்ப்பு நாய்கள் விடாமல் குரைத்தபடி, கடிக்கவருவதுபோல் அவரை நோக்கி விரைந்துள்ளன. உடனே டூவீலரை ஸ்டான்ட் போட்டு நிறுத்திய குருபுத்திரன், அங்கு கிடந்த கல்லை எடுத்து நாய்களின் மீது எறிந்தார். இதனைக் கண்ட சிவன்பெருமாள் ஆத்திரத்தில் தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, கம்பைக் கையிலெடுத்து குருபுத்திரனின் தலையில் அடித்தார்.
நெற்றியில் ரத்தக்காயத்துடன் வன்னியம்பட்டி காவல்நிலையம் சென்ற குருபுத்திரன், நாய்களை வளர்க்கும் சிவன்பெருமாள் தன்னைக் கம்பால் அடித்ததாகப் புகார் கொடுத்துள்ளார். சிவன்பெருமாள் மீது சட்டப் பிரிவுகள் 294(b) (பொது இடத்தில் ஆபாசமாகத் திட்டியது), 324 (மிருகத்தை அபாயம் விளைவிக்கப் பயன்படுத்தியது) மற்றும் 506(ii) (கொலை மிரட்டல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவாகியிருக்கிறது.
வளர்ப்பு நாய் மீது என்னதான் பாசமிருந்தாலும், சகமனிதனும் தன்னைப்போல் ஒரு உயிரினமே என்பதை மறக்கலாமா?