மத்திய அரசின் ஒளிபரப்புச் சட்ட வரைவுக்கு நடிகர் சூர்யா எதிர்ப்பு தெரிவித்து, ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர், ''சட்டம் என்பது கருத்துச் சுதந்திரத்தைக் காப்பதற்காக... குரல்வளையை நெறிப்பதற்காக அல்ல'' எனக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த மாதம் 18ஆம் தேதி மத்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் 1952ஆம் ஆண்டு வகுக்கப்பட்ட ஒளிபரப்புச் சட்ட வரைவில் சில திருத்தங்களை மேற்கொண்டிருப்பதாகவும், புதிதாக சில அம்சங்களை சேர்த்திருப்பதாகவும் அறிவித்தது. ஜூலை மாதம் இரண்டாம் தேதிவரை அந்தச் சட்டம் குறித்த கருத்துகளை மக்கள் தெரிவிக்கலாம் எனவும் அறிவித்திருந்தது.
புதிதாக வர இருக்கிற ஒளிபரப்புச் சட்ட வரைவில், இதுவரை தணிக்கை வாரியத்திடம் மட்டுமே திரைப்படங்களின் தணிக்கைச் சான்றிதழ்கள் மீதான அதிகாரம் இருந்த நிலையில், இனி தணிக்கை வாரியம் சான்றிதழ் அளித்து வெளியான திரைப்படத்தின் மீது பொதுமக்கள் ஆட்சேபனை தெரிவித்தால், அந்தச் சான்றிதழ் குறித்த முடிவுகளை எடுப்பதற்கான உச்ச அதிகாரம் மத்திய அரசுக்கு இருக்கும் என்ற வகையில் அந்தத் திருத்தம் இருந்தது. இதுவரை திரைப்பட தணிக்கை சான்றிதழ் யு, யு/ஏ என்கின்ற வகையில் வழங்கப்பட்டுவந்த நிலையில், யு மற்றும் ஏ சான்றிதழ்கள் ஏற்கனவே உள்ள விதிமுறைகளின்படி வழங்கப்படும். மேலும் யு 7 பிளஸ், யு 13 பிளஸ், யு 16 பிளஸ் என மூன்று வகையில் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது. மத்திய அரசின் இந்த வரைவுச் சட்டத்திற்கு நடிகர் கமல்ஹாசன் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், தற்போது சூர்யாவும் தனது எதிர்ப்பினை தெரிவித்துள்ளார்.
அண்மையில் நீட் தேர்வு பாதிப்புகள் குறித்து ஆராய்வதற்கு தமிழ்நாடு அரசு நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் குழு அமைத்திருந்த நிலையில், அக்குழுவிடம் நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தங்களது கருத்துக்களைப் பதிவுசெய்ய வேண்டும் என நடிகர் சூர்யா அறிக்கை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.