கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பகுதியைச் சேர்ந்தவர் 35 வயது வெங்கடேசன். இவர் தனியார் இயற்கை விவசாய வேளாண் இடுபொருட்கள் விற்பனை நிறுவனத்தில் மண்டல அதிகாரியாக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் நேற்று (24.09.2021) கும்பகோணத்தில் விவசாய இடுபொருட்கள் விற்பனையாளர்கள் சந்திப்பு கூட்டத்தில் பங்குகொள்வதற்காக திருக்கோவிலூரில் இருந்து கும்பகோணம் சென்றுள்ளார். நேற்று முன்தினம் இரவு ஒரு லாட்ஜில் அறையெடுத்து தங்கியுள்ளார். அப்போது கும்பகோணம் அருகே உள்ள மருத்துவக் குடியைச் சேர்ந்த அன்பு என்பவருடன் வெங்கடேசன் உள்ளிட்ட சிலர் கூட்டாக மது அருந்தியதாகவும் அதன் பிறகு அன்பு, வெங்கடேசன் இருவரும் லாட்ஜில் இருந்து வெளியே சென்றதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், மனஞ்சேரி அருகில் காவிரி ஆற்றில் கட்டப்பட்டுள்ள தடுப்பணை அருகே வெங்கடேசன் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து போலீசாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வெங்கடேசன் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியதோடு, திருக்கோவிலூர் பகுதியில் உள்ள வெங்கடேசன் குடும்பத்திற்கும் தகவல் அளித்துள்ளனர். இந்நிலையில், கொலை செய்யப்படுவதற்கு முன்பு லாட்ஜிலிருந்து மருத்துவக்குடி அன்பு, வெங்கடேசன் ஆகிய இருவரும் வெளியே சென்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. அதையடுத்து அன்புவை விசாரிப்பதற்காக போலீசார் மருத்துவக்குடி சென்றுள்ளனர். அங்கே அன்புவின் வீடு பூட்டிக் கிடந்துள்ளது.
அக்கம்பக்கத்தினரிடம் போலீஸ் விசாரித்தபோது, அன்பு தன் மனைவியை அழைத்துக்கொண்டு தஞ்சாவூரில் உள்ள தனியார் மனநல மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றுவருவதாக கூறிவிட்டுச் சென்றதாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அன்புவை தேடி போலீசார் தஞ்சாவூர் விரைந்துள்ளனர். திருக்கோவிலூர் நபர் கும்பகோணத்தில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.