தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு உழவர் உழைப்பாளர் விவசாயிகள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பகத்சிங் மன்ற மாவட்ட தலைவர் உத்தண்ட ராமன் தலைமை வகித்தார். கூட்டத்தில் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு உழவர் உழைப்பாளர் விவசாயிகள் சங்கத்தின் தென்மண்டல தலைவராக உத்தண்டு ராமனும், தூத்துக்குடி மாவட்ட தலைவராக ஜெய கண்ணனும், தென்மண்டல நிர்வாகிகளாக சீத்தாராமன், ஆதிமூலம்,கடம்பூர் துரை, சீனி ராஜ், ஆதிமூலம், சுந்தரி, வீரலட்சுமி, அக்கம்மாள், சுப்பையா, கொம்பையா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், சிறு குறு விவசாயிகளுக்கு 100% மானியம் வழங்க வேண்டும், கிராமப்புறத்தில் உள்ள விவசாயிகளின் குழந்தைகளுக்கு அரசு வேலைகள் வழங்குவதில் முன்னுரிமை வழங்க வேண்டும், நிலம் இல்லாத ஏழை விவசாயிகளுக்கு இரண்டு ஏக்கர் நிலம் அரசு வழங்க வேண்டும், விவசாயிகளுக்கு சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளில் 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு கோவில்பட்டி பயணியர் விடுதியில் சிலை அமைக்க வேண்டும், விவசாயிகள் போராட்டத்தின் போது கோவில்பட்டியில் துப்பாக்கிச் சூட்டில் பலியான விவசாயி கந்தசாமிக்கு நினைவு சின்னம் அமைக்க வேண்டும், கிராமப்புறங்களில் உள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையிலும் அவர்கள் வியாபாரி ஆகலாம் என்ற நோக்கத்துடன் கிராம சந்தைகளை உருவாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் திரளான விவசாய சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.