கோவையில் நேற்றிரவு (26.11.2021) தண்டவாளத்தைக் கடக்க முயன்ற குட்டி யானை உள்பட மூன்று யானைகள், ரயிலில் அடிபட்டு பரிதாபமாகப் பலியாகின. கோவை, மதுக்கரை வனச்சரகம், நவக்கரை, மகேந்திர மேடு, தங்கவேல் காட்டு மூளை என்ற இடம் உள்ளது. இங்கு உள்ள ரயில்வே தண்டவாளத்தை, நேற்றிரவு, பெண் யானை உட்பட மூன்று யானைகள் கடக்க முயன்றன.
அப்போது, அவ்வழியாகக் கேரளாவிலிருந்து மங்களூர்-சென்னை இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் ஒன்று யானைகள் மீது மோதியது. இதில் யானைகள் படுகாயமடைந்து சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டு, அதே இடத்தில் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தன. சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் மற்றும் வனத்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு, மதுக்கரை வனச்சரக அதிகாரிகள் மற்றும் ரயில்வே போலீசார் விரைந்து சென்று விசாரித்து வருகின்றனர். ரயிலில் அடிபட்டு யானைகள் பலியான சம்பவம், மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இது தொடர்பாக விசாரிக்கக் கேரளா சென்ற வனத்துறை அதிகாரிகள் சிறைபிடிக்கப்பட்ட நிகழ்வு மேலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளத் தமிழக வனத்துறையைச் சேர்ந்த இரண்டு வனவர்கள் உட்பட 6 பேர் சென்ற நிலையில் பாலக்காட்டில் கேரள ரயில்வே அதிகாரிகளால் சிறைபிடிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரயில் எஞ்சினில் இருந்து எடுக்கப்பட்ட ஸ்பீடோ மீட்டர் சிப்பை வழங்குமாறு கேரள அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ஸ்பீடோ மீட்டர் சிப்பை வழங்காவிடில் திருட்டு வழக்குப் பதிவு செய்யப்படும் என மிரட்டல் விட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.