சேலம் வழியாக ஈரோட்டுக்கு, காரில் விலை உயர்ந்த போதைப்பொருளை கடத்திச் சென்றதாக கேரள வாலிபர்கள் இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சேலம் அரியானூர் அருகே உள்ள ஒரு தனியார் கல்விக் குழுமத்திற்குச் சொந்தமான கல்லூரியில் படிக்கும் வெளிநாடு, வெளிமாநில மாணவர்களுக்கு விலை உயர்ந்த போதைப்பொருள் ரகசியமாக சப்ளை செய்யப்படுவதாக உளவுப்பிரிவு காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சேலம் மாவட்ட போதைப்பொருள் தடுப்புப் பிரிவு காவல்துறையினர், உளவுப்பிரிவு காவல்துறையுடன் இணைந்து போதைப்பொருள் நடமாட்டத்தைக் கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில், சேலம் வழியாக ஈரோடு நோக்கிச் சென்ற ஒரு சொகுசு காரில் மெத்தம்ஃபேட்டமைன் என்ற விலை உயர்ந்த, அபாயகரமான போதைப்பொருள் கடத்திச் செல்லப்படுவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சங்ககிரி பகுதியின் வைகுந்தம் சுங்கச்சாவடி அருகே மதுவிலக்கு மற்றும் போதைப்பொருள் தடுப்புப்பிரிவு டிஎஸ்பி ராஜேந்திரன் தலைமையிலான ரோந்து காவல்துறையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது ஈரோடு நோக்கிச் சென்ற சொகுசு காரை மடக்கி சோதனையிட்டனர். அந்த காரில் இருந்த 2 வாலிபர்களையும் கீழே இறக்கி பரிசோதித்தனர். அவர்களிடம் இருந்து 30 கிராம் எடையுள்ள மெத்தம்ஃபேட்டமைன் போதைப்பொருள் இருந்தது தெரிய வந்தது. அதை பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் அந்த வாலிபர்கள் கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டம் மங்கலம்குட்டையைச் சேர்ந்த அப்துல் முபாஷிர் (28), முகமது அப்சல் (30) எனத் தெரிய வந்தது. அவர்களைக் கைது செய்ததோடு, அவர்கள் வந்த சொகுசு காரையும் பறிமுதல் செய்தனர். இது ஒருபுறம் இருக்க, பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள் உண்மையிலேயே மெத்தம்ஃபேட்டமையின்தானா அல்லது வேறு வகையான போதைப்பொருளா எனத் தெரியவில்லை என்றும், இதுகுறித்து அறிய ஆய்வகப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.