கடந்த சில தினங்களுக்கு முன்பு, கேரளாவின் ஆலப்புழா நகரிலுள்ள ஏரிக்கரையோரம், வாத்துகள் கொத்துக் கொத்தாக திடீரென்று செத்து விழுந்திருக்கின்றன. தொடர்ந்து கோட்டயம் பகுதியிலுள்ள வாத்துகள் இரையெடுக்க முடியாமல் செத்து மடிந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இதுகுறித்து கேரள கால்நடைத்துறையின் இயக்குனர் குழு, ஸ்பாட்டிற்கு விரைந்து வந்து மடிந்த வாத்துகளை உடற்கூறாய்வு செய்ததில், பறவைக் காய்ச்சலுக்கான வைரஸ் தாக்குதல் இருந்தது தெரியவந்திருக்கிறது. இதனால், தடுப்பு நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்பட்டன. மற்ற வாத்துப் பண்ணைகளிலும் உடனுக்குடன் சோதனை செய்யப்பட்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.
வேகமெடுக்கும் பறவைக் காய்ச்சல் நோய், கோழி மற்றும் மற்ற கால்நடைகளுக்கோ, மனிதர்களுக்கோ பரவிவிடாமல் தடுப்பு நடவடிக்கைகள், சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த இரண்டு தினங்களில் மட்டும், கோட்டயம், குட்டநாடு, ஆலப்புழா பகுதியில், 26 ஆயிரம் வாத்துகள் அழிக்கப்பட்டு புதைக்கப்பட்டுள்ளன.
ஒருபுறம் 'உருமாறிய கரோனா' தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டப்பட்டு வரும் நிலையில், 'பறவைக்காய்ச்சல்' மேலும் ஒரு சுகாதாரச் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், கேரள பண்ணைக் கோழிகளை தமிழக எல்லைகளில் உள்ள கிராமங்களில் விற்கக்கூடாது எனவும், மீறி விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணைஇயக்குனர் பகவத் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழக-கேரள எல்லைப்பகுதியான நீலகிரி மாவட்டம் கூடலூரில் ஆய்வுகளை மேற்கொண்ட அவர், கடந்த ஆண்டு இதேபோல் பறவைக்காய்ச்சல் பரவியபோது, வயநாட்டில் இருந்து, கொண்டுவந்து விற்கப்பட்ட கோழிகளால் பறவைக்காய்ச்சல் பரவியது. இந்தமுறை அதுபோல் நிகழ்ந்துவிடக்கூடாது என்பதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றார்.