
இந்தியாவில் குறைந்து வந்த கரோனா பரவல் தற்போது மீண்டும் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. இதனால் மத்திய மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. தொற்றின் வேகத்தைக் கட்டுப்படுத்த அதிக அளவு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் தொற்று எண்ணிக்கை கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கிடையே, தமிழ்நாட்டில் முக்கிய நபர்கள் மற்றும் திரைப்பிரபலங்களுக்கு கரோனா தொற்று ஏற்படுகிறது.
அந்தவகையில் கடந்த வாரம் நடிகை கீர்த்தி சுரேஷுக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. இத்தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்த அவர், தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாகவும், அனைவரும் கரோனா நெறிமுறைகளை பின்பற்றுமாறும் வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்நிலையில் கடந்த ஒருவாரம் தனிமையில் இருந்து வந்த அவர் தற்போது கரோனா தொற்றில் இருந்து முழுமையாக மீண்டுவிட்டதாகத் தன்னுடைய ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.