முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி வருமானத்திற்கு அதிகமாக 654% சொத்துக்கள் சேர்த்துள்ளதாக முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் வணிகவரித் துறை அமைச்சர் கே.சி. வீரமணிக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று (16.09.2021) காலைமுதல் சோதனை நடத்திவருகிறார்கள். திருப்பத்தூரில் மட்டும் 15 இடங்களிலும், சென்னை, வேலூர், திருவண்ணாமலை என 20க்கும் மேற்பட்ட இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்திவருகிறது.
கடந்த சில மாதங்களாக ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான அதிமுக முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தொடர்ந்து சோதனை நடத்திவருகிறார்கள். அந்த வகையில் கோவையில் முன்னாள் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, கரூரில் முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் வீடுகளில் ஏற்கனவே சோதனை நடைபெற்றது. தற்போது சோதனை நடைபெற்றுவரும் கே.சி. வீரமணி மீது ஊழல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் வருமானத்திற்கு அதிகமாக 654% சொத்துக்கள் சேர்த்துள்ளதாக முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சோதனை நடைபெறும் இடங்களில் போலீசாருடன் அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுவருகிறார்கள்.