கரூர் மாவட்டம், வெண்ணமலை பகுதியில் தனியார் பள்ளியில் படித்து வந்த 12- ஆம் வகுப்பு மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். நேற்று (19/11/2021) பள்ளிக்குச் சென்று மாலை வீடு திரும்பிய நிலையில், மாணவி தற்கொலை செய்து கொண்டது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவி தற்கொலை தொடர்பாக வெங்கமேடு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில், மாணவி உயிரிழப்புக்கு காரணமான அனைவரையும் உடனடியாக கைது செய்து உரிய நடவடிக்கையை காவல்துறை எடுக்க வேண்டும் என்று அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் வலியுறுத்தி வருகின்றன.
அந்த வகையில், கரூர் தொகுதியின் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "கரூர் மாணவி பாலியல் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியளிக்கிறது. கரூர் காவல்துறை கண்காணிப்பாளரிடம் பேசினேன். ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளியை தேடி வருகின்றனர். விரைவில் குற்றவாளியைக் கண்டுபிடித்துவிடுவோம் என்று உறுதியளித்துள்ளார்.
குற்றவாளிகள் உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு கடுமையாக தண்டிக்கப்படவேண்டும். அத்துடன் ஒரு சமூகமாக நமக்குள்ள பொறுப்பை நாம் உதறித்தள்ளிவிட முடியாது. இம்மாதிரியான பாலியல் குற்றங்களின் ஆணிவேரை அறுத்தெரிய தொடர்ந்து பணியாற்ற வேண்டும்.
தந்தையாகவும் இருந்து வளர்தெடுத்த அந்த தாய்க்கு, இந்த மகத்தான இழப்பை ஈடுசெய்யும் ஆறுதல் வார்த்தைகளை யாராலும் சொல்ல முடியாது. அந்த தாய்க்கு என் அன்பும்,அரவணைப்பும்" என்று குறிப்பிட்டுள்ளார்.