திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கல்லூரி பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்த இளைஞருக்கு கடுங்காவல் தண்டனை விதித்து கரூர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
கரூர் மாவட்டம், கடவூர் பகுதியைச் சேர்ந்த இளம் பெண் தனியார் கல்லூரியில் கடந்த 2017ம் ஆண்டு இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். அதே கல்லூரியில் லட்சுமணன் என்பவர் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.
இந்நிலையில், 19.04.2017 அன்று மாணவி, லேப்டாப் வாங்குவதற்காக லட்சுமணன் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு லட்சுமணன் மாணவியிடம் திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் ரீதியாக துன்புறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து அந்த மாணவி தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி லட்சுமணனிடம் கேட்டுள்ளார். ஆனால், அதற்கு லட்சுமணன் மறுப்பு தெரிவித்துவிட்டு, வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்துகொள்ள ஏற்பாடுகள் செய்துள்ளார். அந்த நிலையில், பாதிக்கப்பட்ட மாணவி விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்று பின் சிகிச்சை பெற்று உயிர் தப்பினார். இந்த விவகாரம் தொடர்பாக கடந்த 10-02-20 அன்று மாணவி குடும்பத்தினர் குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து குளித்தலை காவல்துறையினர் விசாரணை செய்து லட்சுமணனை கைது செய்தனர். இந்த வழக்கு மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று வழக்கு விசாரணை அனைத்தும் முடிவுற்று நீதிபதி இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கினார்.
அந்தத் தீர்ப்பில் லட்சுமணனுக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், அபராதம் செலுத்த தவறினால் கூடுதலாக ஓர் ஆண்டுக்கு சிறை தண்டனை விதிக்கப்படும் என்ற மகிளா நீதிமன்றம் நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.