அரபிக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் குமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாகக் கன மழை பெய்தது. இதில் 29 ஆண்டுகளுக்குப் பிறகு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த இடைவிடாத மழையால் மாவட்டம் முழுவதும் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் பெய்த மழையால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார்-1, சிற்றார்-2 அணைகளில் நீர் வரத்து அதிகரித்ததையொட்டி அந்தப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு அங்கிருந்தவர்கள் பாதுகாப்பான பகுதிக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
பின்னர் அந்த அணைகளில் இருந்து 30 ஆயிரம் கன அடி உபரி நீர் திறந்து விடப்பட்டது. இதனால் திற்பரப்பு அருவியில் கட்டுக்கடங்காத வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. திற்பரப்பு அருவியின் மேல்பகுதியில் உள்ள 20 அடி உயரத்திலான கல் மண்டபத்தை மூழ்கடித்து தண்ணீர் பாய்கிறது. மேலும் தாமிரபரணி, கோதையாறு, பரளியாறு, பழையாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆற்றங்கரையோரம் உள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களை மூழ்கடித்துள்ளது. இதனால் 5 வீடுகள் இடிந்து விழுந்தது.
குழித்துறை மற்றும் குறும்பனையைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவர்கள் நிஷான், ஜெபின் ஆகிய இருவரும் தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டு இறந்தனர். அதே போல் கிராம்பு பறிக்கும் தொழிலாளி வாழையத்து வயலைச் சேர்ந்த சித்திரைவேல் (39), காளிகேசம் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார். அவரை தேடும் பணியில் தீயணைப்புத் துறையினர் இரண்டு நாட்களாக ஈடுபட்டுள்ளனர். மேலும், 30க்கும் மேற்பட்ட கால்வாய்களில் உடைப்பு ஏற்பட்டு நெல், வாழை போன்ற பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. இதனால் அந்த விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
வைணவ திருத்தலங்களில் ஒன்றான திருப்பதிசாரம் திருவாழ்மார்பன் கோவில், கல்லுபாலம் இசக்கி அம்மன் கோவில், காளிகேசம் இசக்கி அம்மன் கோவில் உட்பட 10க்கும் மேற்பட்ட கோவில்கள் நீரில் மூழ்கியுள்ளன. நாகர்கோவில் - திருவனந்தபுரம் ரயில் பாதையில் ஆளூரில் மண் சரிவு ஏற்பட்டு ரயில் தண்டவாளம் மண் மற்றும் கற்கலால் மூடியது. இதில் அனந்தபுரி ரயில் அதிர்ஷ்டவசமாக தப்பியது. மேலும் ஆறுகாணி, பத்துகாணி, மருதம்பாறை பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டது. இதிலும் மக்கள் அதிர்ஷ்டவசமாக தப்பினார்கள். மேலும் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான சாலைகளில் போக்குவரத்து செல்லமுடியாத அளவுக்கு சாலைகளில் வெள்ளம் குளம் போல் காட்சியளிக்கிறது.
செங்கல் சூளைகள், ரப்பர் தோட்டங்கள், நர்சரி பூந்தோட்டங்களில் வெள்ளம் புகுந்ததால் அந்த விவசாயிகளுக்கும் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. வீடுகளைச் சூழ்ந்து வெள்ளக்காடாக இருந்ததால் வீடுகளில் இருந்தவர்களை தீயணைப்பு வீரர்களும், சமூக தொண்டர்களும் ரப்பர் படகு மூலம் மீட்டு வருகின்றனர். இதுவரை சுமார் 600 பேரை மீட்டு, முகாம்களில் தங்க வைத்துள்ளனர். இதில் நித்திரவிளை அருகே வைக்கலூரில் ஆற்று வெள்ளம் புகுந்ததால் அது தனித் தீவாக மாறி அதில் 40 பேர் சிக்கிக்கொண்டனர். அவர்களை மீட்கச் சென்ற தீயணைப்பு வீரர்களின் படகு கவிழ்ந்ததால் 13 தீயணைப்பு வீரர்கள் நீந்தி கரையைச் சேர்ந்தனர்.
இந்த நிலையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இன்று (18-ம் தேதி) குமரி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஜோதி நிர்மலாசாமி மற்றும் மாவட்ட ஆட்சியர் அரவிந்தன் ஆகியோர் பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார்கள். அவர்களுக்கான நிவாரணங்களும் கிடைக்க ஏற்பாடு செய்தனர்.