கடந்த ஜூலை 18- ஆம் தேதி அன்று நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களின் கேள்விக்கு சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர்.
அந்த வகையில், விலைவாசி உயர்வு குறித்த விவாதம் இன்று பிற்பகல் மக்களவையில் நடைபெற்றது. அப்போது பேசிய கனிமொழி எம்.பி., "உணவுப் பொருட்களின் கடுமையான விலை உயர்வால் குடும்ப பட்ஜெட் பாதிக்கப்பட்டுள்ளது. மக்களைப் பாதிக்கும் வகையில் விலைவாசி உயர்ந்துள்ளது. பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு விலை உயர்வால் பொதுமக்கள் கடுமையாக பதிக்கப்பட்டுள்ளன. பா.ஜ.க. ஆட்சியில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக, உணவுப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியம் நிறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள சில தொழிலதிபர்கள் வாழ்வதற்கு மத்திய அரசு உதவி செய்து வருகிறது. அடித்தட்டு மக்களுக்கு உதவிகள் செய்ய தயங்கும் அரசு, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தொடர்ந்து உதவி செய்து வருகிறது.
பணமதிப்பிழப்பால் 50,000 சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி நிலுவைத்தொகை முறையாக வழங்கப்படுவதில்லை. மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்" என்று அரசுக்கு கோரிக்கை வைத்தார்.
விவாதத்தின் போது, கனிமொழி எம்.பி., தமிழ் பேசியதும், விலை உயர்ந்துள்ள பொருட்களின் பெயர்களை பட்டியலிட்டு பேசியதும் குறிப்பிடத்தக்கது.