இந்தியா முழுவதும் நீட் தேர்வு நேற்று முன்தினம் (12.09.2021) நடைபெற்றது. சுமார் 16 லட்சம் மாணவர்கள் இந்தியா முழுவதும் 500க்கும் அதிகமான மையங்களில் இந்த தேர்வை எழுதினார்கள். தமிழ்நாட்டில் சுமார் 1.10 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வை எழுதினார்கள். தமிழ்நாட்டில் நீட் தேர்வு ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் தேர்வு பயத்தால் இதுவரை 15க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளார்கள். இந்த ஆண்டிற்கான நீட் தேர்வு கடந்த ஞாயிறன்று நடைபெற்ற நிலையில், தேர்வுக்கு முந்தைய தினம் தனுஷ் என்ற மாணவர் தேர்வுக்குப் பயந்து தற்கொலை செய்துகொண்டார்.
இந்த சோகத்தில் இருந்து இன்னும் மீளாத நிலையில் இன்று காலை கனிமொழி என்ற மாணவி நீட் தேர்வு சரியாக எழுதவில்லை என்ற காரணத்தால் தற்கொலை செய்துகொண்டுள்ளார். உயிரிழந்த கனிமொழி 12ஆம் வகுப்பு தேர்வில் பள்ளியில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றுள்ளார். இந்நிலையில், இந்த தற்கொலைகள் தொடர்பாக நடிகர் கமல்ஹாசன் அரசை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அதில், "ஜெய்ப்பூரில் 35 லட்சம் ரூபாய்க்கு நீட் தேர்வின் வினாத்தாள்கள் விநியோகமாகிக்கொண்டிருக்க இங்கே தனுஷ், கனிமொழி போன்ற அப்பாவி மாணவர்கள் தங்கள் இன்னுயிரை நீத்துக்கொண்டிருக்கிறார்கள். இது ஒரு நாடு, இது ஒரு தேர்வு, இந்த வணிக நாடகத்தை அரங்கேற்ற ஒரு அரசு. சொல்லக்கொதிக்குதடா நெஞ்சம்!" என விமர்சனம் செய்துள்ளார்.