கடந்த மாதம் புரட்டாசி என்பதால் அசைவ உணவுகள் மற்றும் இறைச்சி, முட்டை விற்பனை என்பது மந்தமானது. இந்நிலையில், தமிழ் மாதம் புரட்டாசி முடிந்து ஐப்பசி மாதம் பிறந்ததால் மீண்டும் அசைவ உணவுகள் மற்றும் இறைச்சி விற்பனை அதிகரித்துள்ளது. ரம்ஜான், பக்ரீத் உள்ளிட்ட பண்டிகைகளின்போது ஆட்டுச் சந்தைகளில் ஆடு விற்பனை என்பது விண்ணைத்தொடும். குறிப்பிட்ட பண்டிகை சமயங்களில் கோடி ரூபாய் கணக்கில் ஆடுகள் விற்பனை சூடுபிடிக்கும்.
இந்நிலையில் புரட்டாசி மாதம் முடிந்ததால் கள்ளக்குறிச்சி ஆட்டுச் சந்தையில் இன்று (19.10.2021) ஆடு விற்பனை ஜோராக நடைபெற்றது. கள்ளக்குறிச்சி, ரிஷிவந்தியம் ஆட்டுச் சந்தையில் இன்றுமட்டும் ஒருகோடி ரூபாய் மதிப்புள்ள ஆடுகள் விற்பனையானதாக ஆட்டு வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். புரட்டாசி முடிந்த கையோடு ஒருகோடி ரூபாய் கல்லாகட்டிவிட்டது ரிஷிவந்தியம் ஆட்டுச் சந்தை.