Skip to main content

மினி க்ளினிக் திறப்பு விழா ரத்து.. கிராம மக்கள் சாலை மறியல்!

Published on 16/12/2020 | Edited on 16/12/2020

 

Kallakurichi Mini Clinic Opening Ceremony Canceled ..

 

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழகம் முழுவதும் கிராமங்களில் 2,000 மினி க்ளினிக் துவங்குவதாகக் கூறி அறிவித்ததோடு, அதற்கான துவக்க விழாவையும் நடத்தினார். அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகிலுள்ள கீழ்பாடி கிராமத்தில், மினி க்ளினிக் திறக்கப் போவதாகக் கூறி சுகாதாரத் துறையினர், வருவாய்த் துறையினர் உட்பட பல்வேறு துறை அதிகாரிகள் அந்தக் கிராமத்தில் ஏற்கனவே செயல்பட்டு வந்த கிராம சேவை மைய கட்டடத்தை, கடந்த 20 நாட்களாகச் சுத்தம் செய்து க்ளினிக் அமைப்பதற்கான தளவாடப் பொருட்கள் மற்றும் கட்டடத்துக்கு வண்ணம் பூசுவது எனப் பல்வேறு பணிகளைச் செய்து வந்தனர். 

 

இந்த நிலையில், ஏற்கனவே இந்தக் கட்டடத் திறப்பு விழாவில் திமுக எம்.எல்.ஏ வசந்தன் கார்த்திகேயன் பெயர் எழுதப்பட்டிருந்தது. அந்தப் பெயரை அழித்துவிட்டு, அம்மா க்ளினிக் என்று எழுத முற்பட்டனர். இதற்கு அந்தக் கிராமத்தில் இருந்த தி.மு.க பிரமுகர்கள் எம்.எல்.ஏ பெயரை அழிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது குறித்து அவர்களிடம் பேசி சரி செய்வதை விட்டுவிட்டு, அதிகாரிகள் திறப்பு விழாவை ரத்து செய்துள்ளனர். அதோடு இங்கு திறப்புவிழா செய்ய வேண்டிய மினி க்ளினிக் மொகலார் கிராமத்திற்கு இடமாற்றம் செய்வதற்கு முடிவெடுத்துள்ளனர். 

 

இதுகுறித்து தகவலறிந்த அந்தக் கிராமத்தைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள், அங்குள்ள கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் முன்பு காலை 9 மணி அளவில் ஒன்று திரண்டு முற்றுகையிட்டனர். இதனால், அதிகாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து ரிஷிவந்தியம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் பொதுமக்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்படவில்லை. அதனைத் தொடர்ந்து ரிஷிவந்தியம் வட்டார மருத்துவ அலுவலர் ஜெயபால், சங்கராபுரம் துணை வட்டாட்சியர் வெங்கடேசன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 

 

அதிலும் உடன்பாடு எட்டவில்லை. இதனால், மேலும் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் தியாகதுருகம் மணலூர்பேட்டை நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்தத் தகவலை அடுத்து திருக்கோவிலூர் டி.எஸ்.பி ராஜி, சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போதும் உடன்பாடு ஏற்படவில்லை. மினி க்ளினிக் எங்கள் ஊரில் திறக்கப்பட வேண்டும் அதற்கு உறுதி அளித்தால், சாலை மறியலைக் கைவிடுவதாக பொதுமக்கள் தெரிவித்தனர். 


ஆனால், அதிகாரிகள் அந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்ததால் பொதுமக்களின் சாலை மறியல் தொடர்ந்தது. இதையடுத்து மறியலில் ஈடுபட்ட ஆண், பெண் உட்பட 86 பேர்கள் மீது கிராம நிர்வாக அலுவலர் குழந்தைவேலு ரிஷிவந்தியம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரை அடுத்து போலீசார் வலுக்கட்டாயமாக கீழ்பாடி கிராம மக்களைக் கைதுசெய்து குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று காவல்துறை வாகனத்தில் ஏற்றி சென்றனர். 

 

அவர்களை அப்பகுதியில் உள்ள சமுதாயக் கூடத்தில் அடைத்து வைத்தனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சமுதாயக் கூடத்தில் மாலை வரை வைத்திருந்துவிட்டு பிறகு விடுவித்தனர். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மணக்கோலத்தில் நேர்முக தேர்வில் கலந்துகொண்ட புது மணப்பெண்...!

Published on 23/02/2021 | Edited on 23/02/2021

 

The newlyweds who attended the interview

 

திருச்சி மாவட்டத்திற்கு 58 மினி கிளினிக்குள் அமைத்துக்கொள்ள தமிழக அரசால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுவரை 35 மினி கிளினிக்குகள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

 

கிராமப் பகுதியில் வசிக்கும் ஏழை - எளிய மக்கள் மருத்துவ வசதியினை எளிதாகவும் இலவசமாகவும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த மினி கிளினிக் திட்டம் கொண்டு வரப்பட்டது. சர்க்கரை நோய், காய்ச்சல், சளி, இரத்த அழுத்தம் போன்ற பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும்  இந்த அம்மா மினி கிளினிக்கில், செவிலியர் மற்றும் உதவியாளர்கள் பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கான நேர்முகத் தேர்வு திருச்சி மாவட்ட ஆட்சியர் அரங்கில் நேற்று (22.02.2021) நடைபெற்றது. 

 

இதில் ஏராளமான விண்ணப்பதாரர்கள் வந்து நேர்முகத் தேர்வில் கலந்துகொண்டனர். இதில் புதுமணப்பெண் ஒருவர் மணக்கோலத்தில் நேர்முகத் தேர்வில் கலந்துகொண்டார். திருச்சியைச் சேர்ந்த மகேஸ்வரன் - ராகவி ஆகியோருக்கு நேற்று திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், செவிலியர் பணிக்கு விண்ணப்பித்திருந்த ராகவி மணக்கோலத்தில் தனது கணவருடன், நேற்று நடந்த நேர்முகத் தேர்வில் கலந்துகொண்டார்.

 

 

Next Story

போட்டி போட்டுக்கொண்டு ரிப்பன் வெட்டிய 'தி.மு.க - அ.தி.மு.க'!

Published on 19/12/2020 | Edited on 19/12/2020

 

DMK, ADMK Competitive open mini clinic


மேல் புவனகிரி ஒன்றியம் பி.உடையோர் ஊராட்சியில் மினி கிளினிக் திறப்பதில் தி.மு.க., அ.தி.மு.க. இடையே ஏற்பட்ட போட்டியால் பரபரப்பு  ஏற்பட்டது.


கடலூர் மாவட்டம், மேல் புவனகிரி ஒன்றியம் பி.உடையூர் ஊராட்சியில் மினி கிளினிக் திறப்பு விழாவிற்கு ஏற்பாடு செய்தனர். அ.தி.மு.க. ஒன்றிய சேர்மன் சிவப்பிரகாசம் தலைமையில் மேற்கு மாவட்டச் செயலாளர் அருண்மொழிதேவன் திறந்து வைப்பதற்கு இந்த ஏற்பாடு செய்யப்பட்டது.

 

பின்னர், புவனகிரி தொகுதி எம்.எல்.ஏ (தி.மு.க) சரவணன் திறந்துவைக்க அக்கட்சியினரும் ஏற்பாடு செய்தனர். இதனால் அங்கு பரபரப்பாக இருந்தது. தி.மு.க.வினர் சரவணன் எம்.எல்.ஏ.வை வரவேற்று இடதுபக்கம் பேனரும், வலது பக்கம் அ.தி.மு.க தரப்பினரும் பேனர் வைத்தனர்.

 

இந் நிலையில், அ.தி.மு.க மாவட்டச் செயலாளர் அருண்மொழிதேவன், நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. தி.மு.க., அ.தி.மு.க.வினர் கட்சிக் கொடிகளைக் கட்டி இரு கோஷ்டிகளாக அங்கு திரண்டனர். சரவணன் எம்.எல்.ஏ சம்பவ இடத்திற்கு வந்தவுடன் தி.மு.க.வினர் மேளதாளத்துடன் வரவேற்றனர். அவர் ஊராட்சி அலுவலகத்திலுள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்துக் கொண்டிருந்தபோது, அ.தி.மு.க.வை சேர்ந்த ஒன்றிய சேர்மன் சிவப்பிரகாசம் ரிப்பன் வெட்டி மருத்துவமனையை திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து தி.மு.க எம்.எல்.ஏ சரவணனும் மறுபடியும் கட்டிய ரிப்பனை வெட்டி திறந்து வைத்தார்.

 

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அ.தி.மு.க.வினர் 'ஜெயலலிதா வாழ்க!', 'எடப்பாடியார் வாழ்க!' என முழக்கமிட்டனர். அதேபோல், தி.மு.க.வினர் 'கலைஞர் வாழ்க!', 'ஸ்டாலின் வாழ்க!' என்று முழக்கமிட்டனர். இரு தரப்பினரும் மாறி மாறி முழக்கமிட்டதால்  மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து போலீசார் இருதரப்பினரையும் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.