![Kallakurichi Cheranthangal government school teacher demand](http://image.nakkheeran.in/cdn/farfuture/DbNqL1gJc8_usii1jcOAdp-8SRkMzwUZerYraULXwKo/1656409252/sites/default/files/inline-images/th_2692.jpg)
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் தாலுக்காவில் உள்ள சேரன்தாங்கள் கிராமத்தில் 1986ம் ஆண்டு ஒரு அரசு தொடக்கப் பள்ளியை அரசு துவக்கியது. அப்போது முதல் அந்தக் கிராமம் உட்பட அதனைச் சுற்றியிருந்த கிராமத்தின் குழந்தைகளும் அந்தப் பள்ளியில் சேர்ந்து படித்துவந்தனர். தற்போது அதே பள்ளியில் ஏறத்தாழ 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள். ஆனால், இத்தனைக் குழந்தைகளுக்கும் அந்தப் பள்ளியில் ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே பணியில் உள்ளார்.
ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள அந்த 50க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கான அனைத்து வகுப்புகளையும் அவர் ஒருவரே எடுத்துவருகிறார். அந்த ஆசிரியர் அவசர விடுப்பு எடுத்தாலும், கல்வித்துறை சம்பந்தமான அதிகாரிகளைச் சந்திக்க சென்றாலும், பயிற்சி வகுப்புகளுக்கு சென்றாலும் அன்றைக்கெல்லாம் பள்ளிக்கு விடுமுறை தான். இதன் காரணமாக அந்தக் கிராம மக்கள், பல்வேறு முறை மேலும், ஒரு ஆசிரியரை நியமிக்க கோரி அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்திருந்தனர். ஆனாலும், கூடுதல் ஆசிரியர் நியமிக்கப்படவில்லை.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘எங்கள் கிராமம், மிகவும் பின்தங்கிய கிராமம். இங்கு பள்ளி இல்லை என்றால் மாணவர்கள் கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர், சங்கராபுரம் போன்ற நகரங்களுக்கு தான் செல்ல வேண்டும். ஆனால், அவையாவும் இங்கிருந்து தூரம் அதிகமான பகுதி. போக்குவரத்து வசதிகளும் குறைவு. இதன் காரணமாக இப்பள்ளிக்கு கூடுதல் ஆசிரியர் நியமனம் செய்தாலும், அவர்கள் மேற்படி காரணங்களால் பள்ளிக்கு வருவதை தவிர்த்து மாற்று பள்ளிகளுக்கு மாறுதல் பெற்று சென்று விடுகிறார்கள்’ என்கின்றனர்.