திரைத்துறை, எழுத்து உட்பட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு தமிழக அரசு சார்பில் கலைமாமணி விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி, 2011 முதல் 2018-ம் ஆண்டு வரையிலான கலைமாமணி விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட 201 நபர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. சபாநாயகர் தனபால் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இயற்றமிழ் துறையில் 2011-ம் ஆண்டுக்கான கலைமாமணி விருது கிழாம்பூர் சங்கரசுப்பிரமணியன், திருப்பூர் கிருஷ்ணன் உள்ளிட்டோருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். இதேபோன்று நாடக நகைச்சுவை நடிகர் டி.வெங்கட்ராமன், திரைப்பட நடிகை குட்டி பத்மனி, கலை விமர்சகர் ஹரிகேசநல்லூர் வெங்கட்ராமன் உட்பட மொத்தம் 30 கலைஞர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலைமாமணி விருதுடன் தங்கப் பதக்கம், சான்றிதழ் மற்றும் காசோலையை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
இலக்கிய சொற்பொழிவாளர் மு.பெ.ராமலிங்கம், பத்திரிகையாளர் அசோக்குமார், காவடியாட்டம் சிவாஜிராவ், திரைப்பட ஒளிப்பதிவாளர் என்.வி.ஆனந்தகிருஷ்ணன், திரைப்பட நடிகை வரலட்சுமி உள்ளிட்ட 30 கலைஞர்களுக்கு 2012-ம் ஆண்டுக்கான கலைமாமணி விருதுகளை முதலமைச்சர் வழங்கினார்.
திரைப்பட நடிகர் பிரசன்னா, குணச்சித்திர நடிகர் ஆர்.பாண்டியராஜன், நாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா உட்பட 19 நபர்களுக்கு 2013-ம் ஆண்டுக்கான கலைமாமணி விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
நடிகர் கார்த்தி, குணச்சித்திர நடிகர் பொன்வண்ணன், பரத நாட்டிய ஆசிரியர் பாண்டியன், கவிஞர் மா.திருநாவுக்கரசு உட்பட 20 கலைஞர்களுக்கு 2014-ம் ஆண்டுக்கான விருதை முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார்.
பாடலாசிரியர் யுகபாரதி, இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, திரைப்பட நடிகர் பிரபுதேவா உட்பட 20 நபர்களுக்கு 2015-ம் ஆண்டுக்கான கலைமாமணி விருதும், நடிகர் சசிக்குமார், குணச்சித்திர நடிகர் தம்பி ராமையா, நகைச்சுவை நடிகர் சூரி, நாட்டுப்புற பாடற் கலைஞர் கலாராணி உட்பட 20 நபர்களுக்கு 2016-ம் ஆண்டுக்கான விருதையும் முதலமைச்சர் வழங்கி கவுரவித்தார்.
நடிகர் விஜய் சேதுபதி, நடிகை பிரியாமணி, இயக்குநர் ஹரி, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, நகைச்சுவை நடிகர் சிங்கமுத்து, தேவார இசை சம்பந்த ஓதுவார் உட்பட 28 கலைஞர்களுக்கு 2017-ம் ஆண்டுக்கான விருது வழங்கப்பட்டது.
இயற்றமிழ் துறையில் நிர்மலா பெரியசாமி, நகைச்சுவை நடிகர் சந்தானம், ஒளிப்பதிவாளர் ரவிவர்மன், பின்னணி பாடகர் உன்னி மேனன், தோற்பாவைக் கூத்து முத்துச்சந்திரன் உட்பட 34 கலைஞர்களுக்கு 2018-ம் ஆண்டுக்கான விருதுகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கி பாராட்டினார்.
கலைமாமணி விருது பெரும் கலைஞர்களுக்கு மூன்று சவரன் எடையுள்ள பதக்கமும், ஒரு லட்சம் ரூபாய் காசோலையும் வழங்கப்பட்டது.