தமிழக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கலைஞரின் 5ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, சேலத்தில் அக்கட்சியினர் கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
திமுக தலைவரும், மறைந்த தமிழக முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதியின் 5ம் ஆண்டு நினைவு தினம், தமிழகம் முழுவதும் ஆக. 7ம் தேதி அனுசரிக்கப்பட்டது. சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளர் ராஜேந்திரன் எம்.எல்.ஏ தலைமையில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பெரியார் சிலை அருகே தொடங்கி மாநகராட்சி அலுவலகம், ஆட்சியர் அலுவலகம், பெரியார் மேம்பாலம் வழியாக மவுன ஊர்வலமாகச் சென்று அண்ணா பூங்கா அருகே உள்ள கலைஞர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
மத்திய மாவட்ட அவை தலைவர் ஜி.கே.சுபாசு, பொருளாளர் கார்த்திகேயன், மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், தேர்தல் பணிக்குழுச் செயலாளர் தாமரைக்கண்ணன், மாவட்ட துணைச் செயலாளர்கள் குமரவேல், திருநாவுக்கரசு, மாநகர செயலாளர் ரகுபதி, மாநகராட்சி கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் டி.எம்.செல்வகணபதி தலைமையில் நிர்வாகிகள், தாரமங்கலத்தில் உள்ள கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினர். இடங்கணசாலையில் உள்ள கலைஞர் சிலைக்கும் அவர் தலைமையில், நகரச் செயலாளர் செல்வம், நகர்மன்றத் தலைவர் தாமரைக்கண்ணன் மற்றும் நிர்வாகிகள் மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினர்.
சேலம் கிழக்கு மாவட்டத்தில், அயோத்தியாப்பட்டணம் தெற்கு ஒன்றிய செயலாளர் விஜயகுமார் தலைமையில் அயோத்தியாப்பட்டணம் ஒன்றிய அலுவலகம், பேரூராட்சி அலுவலகம் அருகே அலங்கரிக்கப்பட்ட கலைஞர் படத்திற்கு மலர் தூவியும், மாலை அணிவித்தும் நிர்வாகிகள், தொண்டர்கள் மரியாதை செலுத்தினர். ஒன்றிய நிர்வாகிகள் அகரம் ராஜேந்திரன், ஒன்றியக்குழுத் தலைவர் ஹேமலதா, துணைத்தலைவர் புவனேஸ்வரி செந்தில்குமார், நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும், கலைஞர் நினைவு தினத்தையொட்டி அறுநூத்துமலை கிராமத்தில் ஏழைகளுக்கு அயோத்தியாப்பட்டணம் தெற்கு ஒ.செ. விஜயகுமார் வேட்டி, சேலைகளை வழங்கினார். பழங்குடியினர் பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட சமையல்கூடத்தை அயோத்தியாப்பட்டணம் ஒன்றியக்குழுத் தலைவர் ஹேமலதா விஜயகுமார் திறந்து வைத்தார். ஆத்தூரில், ஒ.செ. மருத்துவர் செழியன் தலைமையில் நிர்வாகிகள் கலைஞர் படத்திற்கு மாலை அணிவித்தும், மலர்கள் தூவியும் அஞ்சலி செலுத்தினர்.