ஸ்ரீவில்லிபுத்தூரில் மனவாள மாமுனிகள் ஜென்ம நட்சத்திர விழா நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் கலந்துகொண்ட தமிழக செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்தார்.
“உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெறும். இடைத் தேர்தலைப் போல அதிமுக கூட்டணி உள்ளாட்சி தேர்தலிலும் நூறு சதவீதம் வெற்றி பெறும். உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதை எம்எல்ஏக்கள் விரும்பவில்லை என்று யார் சொன்னது? அதுபோன்று எந்த ஒரு தனி விருப்பமும் எங்களது கட்சியில் கிடையாது. தலைமை எடுக்கும் முடிவுகளுக்கு அனைவரும் கட்டுப்படுவோம். புத்தாண்டு பிறப்பதற்குள் பத்திரிக்கையாளர் நல வாரியக் குழு அமைக்கப்படும் புது படத்தை சிறப்பு காட்சி என்ற பெயரில், அரசு நிர்ணயிக்கப்பட்ட ஒரு காட்சிக்கு அனுமதி வாங்கிவிட்டு, இரண்டு, மூன்று காட்சிகள் ஒளிபரப்புவதால்தான் அதற்கு அனுமதி அளிக்கவில்லை. இனி அது நடைமுறைப்படுத்தப்பட்டு சிறப்பு காட்சிகளுக்குத் தனி கட்டணம் வசூலித்து அனுமதிக்கப்படும்.
நடுக்காட்டுப்பட்டியில் நடந்ததை ஊடகத்துறை மூலமாக நாட்டுக்கே வெளிச்சம்போட்டு.. ஊடகத்துறையினர் அத்தனை பேரும் மூன்று நாட்கள் லைவ் ஆகக்காட்டி.. என்னென்ன முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது என்பதை மக்கள் அறிவார்கள். இன்னும் சொல்லப்போனால், அது பொது இடத்தில் இருந்த ஆழ்துளைக்கிணறு அல்ல. அவர்களுடைய சொந்த இடத்தில் அஜாக்கிரதையால் நடந்த நிகழ்வு என்பது ஊருக்கே வெளிச்சமாகத் தெரியும். இதிலிருந்து ஸ்டாலினின் மனப்பான்மையை நாட்டு மக்கள் தெரிந்துகொள்ளலாம். நீங்களும்.. ஊடகத்துறையினரும் இந்த அபத்தமான குற்றச்சாட்டை மக்கள் முன்வைக்க வேண்டும்.” என்றார்.
உயிரோடு சுஜித்தை மீட்க முடியாமல் அரசுத்தரப்பு சந்தித்த தோல்வியை ஏற்க கடம்பூர் ராஜுவுக்கு மனம் இல்லை போலும்! பரவாயில்லையே! அரசுத்தரப்பிலும், அதிமுக தரப்பிலும் தலா ரூ.10 லட்சம் என மொத்தம் ரூ.20 லட்சத்தை சுஜித்தின் குடும்பத்திற்குத் தந்துவிட்டு, பெற்றோரின் அஜாக்கிரதையால்தான் அந்த மரணமே நிகழ்ந்தது என்று வெளிப்படையாகச் சொல்கிறாரே!