இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியை பயன்படுத்தி கச்சத்தீவை குத்தகை அடிப்படையில் இந்தியாவிடம் ஒப்படைக்கும் முயற்சிகள் நடந்துவருவதாக இலங்கை மீனவர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைப் பயன்படுத்தி கச்சத்தீவை இந்தியா மீட்க வேண்டும் எனத் தமிழகத்தில் பரவலாக குரல்கள் எழுந்துள்ள நிலையில், இந்தக் குற்றச்சாட்டை இலங்கை மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கை மன்னார் மாவட்டத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மீனவர் சங்க பிரதிநிதிகள், “கச்சத்தீவுப் பகுதி இந்தியாவுக்கு நீண்டகால குத்தகை அடிப்படையில் வழங்கப்பட இருப்பதாக ஊடகங்கள் வாயிலாகவும், மன்னார் மாவட்ட மீனவர்கள் மூலமாகவும் எங்களுக்குத் தெரியவந்தது. இதன் உண்மைத்தன்மை மீனவர் கூட்டுறவுச் சங்கங்களின் தலைவர்களான எங்களுக்கே இன்னும் தெரியாது. இலங்கையில் ஏற்பட்டிருக்கிற பொருளாதார நெருக்கடியைப் பயன்படுத்தி இந்த அரசாங்கத்தில் கடந்தகாலத்தில் அமைச்சர்களாக இருந்தவர்களின் தன்னிச்சையான செயல்பாட்டினால், கச்சத்தீவை குத்தகைக்கு விடுவது தொடர்பாக இந்தியாவிடம் பேசப்பட்டுக் கொண்டிருக்கலாம் என்ற ஐயம் எங்களுக்கு ஏற்பட்டுள்ளது. புதிதாக பொறுப்பேற்றிருக்கும் பிரதமர் இந்த கச்சத்தீவு விவகாரத்தில் அதிக கவனம் செலுத்தி நமது இறையாண்மையை விட்டுக்கொடுக்காமல் பாதுகாக்க வேண்டும்” எனத் தெரிவித்தனர்.