Skip to main content

"ஜூலை 18 தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும்" - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு!

Published on 30/10/2021 | Edited on 30/10/2021

 

"July 18 will be celebrated as Tamil Nadu Day" - Chief Minister MK Stalin's announcement!

 

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (30/10/2021) வெளியிட்டுள்ள அறிவிப்பில், "1956ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் நாள் இந்தியா முழுவதும் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. அதன் அடிப்படையில் அப்போதைய மெட்ராஸ் மாகாணத்திலிருந்து ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளத்தின் சில பகுதிகள் பிரிந்து சென்றன. 2019ஆம் ஆண்டு முதல் நவம்பர் 1ஆம் நாளை தமிழ்நாடு மாநில நாளாக அப்போதைய அரசு அறிவித்திருந்தது. 

 

இந்நிலையில், பல்வேறு அரசியல் கட்சிகள், தமிழ் உணர்வாளர்கள், தமிழ் கூட்டமைப்பினர், தமிழ் அறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் என பல தரப்பிலும் நவம்பர் 1ஆம் நாள் எல்லை போராட்டத்தினை நினைவுக்கூறும் நாளாகத்தான் அமையுமே தவிர தமிழ்நாடு நாளாக கொண்டாடுவது பொருத்தமாக இருக்காது என்றும், மெட்ராஸ் மாகாணம் என்று இருந்ததை மாற்றி பேரறிஞர் அண்ணாவால் 1968ஆம் ஆண்டு ஜூலை 18ஆம் நாள் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, தமிழ்நாடு என்று பெயரிடப்பட அந்த நாள்தான் தமிழ்நாடு நாள் என கொண்டாடப்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்திவருகிறார்கள். 

 

பல்வேறு அமைப்புகளின் கோரிக்கைகளைக் கவனமாகப் பரிசீலித்து, தாய் தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு எனப் பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய ஜூலை 18ஆம் நாளினையே தமிழ்நாடு நாளாக இனி கொண்டாட அரசாணை விரைவில் வெளியிடப்படும். 

 

எல்லைப் போராட்டத் தியாகிகளை சிறப்பிக்கும் வகையில் நவம்பர் 1ஆம் நாளை எல்லைப்போராட்டத் தியாகிகளை கௌரவிக்கும் வகையில், 1956ஆம் ஆண்டு மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்டபோது, தமிழ்நாட்டின் எல்லைகளைக் காக்கும் போராட்டங்களில் ஈடுபட்டு சிறை சென்ற தியாகிகளைத் தமிழ்நாடு அரசு போற்றி, சிறப்பித்துவருகிறது. தற்போது எல்லைக் காவலர்கள் மொத்தம் சுமார் 110 பேர் மட்டுமே உள்ளனர். இவர்களுக்குத் திங்கள்தோறும் உதவித்தொகையாக ரூபாய் 5,500-ம், மருத்துவப் படியாக ரூபாய் 500- ம் வழங்கப்பட்டுவருகிறது. 

 

மேலும், எல்லைக் காவலர்களின் மரபுரிமையர்கள் 137 பேருக்கு திங்கள்தோறும் உதவித்தொகையாக ரூபாய் 3,000- ம் மருத்துவப்படியாக ரூபாய் 500- ம் வழங்கப்பட்டு வருகிறது. எல்லைப் போராட்டங்களில் நேரடியாக ஈடுபட்டு சிறை சென்று தியாகம் செய்து, தற்போது வாழ்ந்துகொண்டிருக்கும் எல்லைக் காவலர்கள் 110 பேருக்கு சிறப்பு நேர்வாக வரும் நவம்பர் 1ஆம் நாள் தலா ரூபாய் 1 லட்சம் வீதம் பொற்கிழி வழங்கி கௌரவிக்கப்படுவார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்." இவ்வாறு முதலமைச்சர் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்