சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜியை மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யும் கொலிஜியத்தின் பரிந்துரைக்கு இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்த நிலையில், தற்போது நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி கொல்கத்தா புறப்பட்டார்.
கடந்த 10 மாதங்களுக்கு முன்பு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட சஞ்ஜிப் பானர்ஜியை மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு இடமாற்ற முடிவுசெய்து உச்ச நீதிமன்றத்தின் கொலிஜியம் மத்திய சட்டத்துறை அமைச்சகத்துக்குப் பரிந்துரை செய்தது.
இந்தநிலையில், கொலிஜியம் தனது பரிந்துரையை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்தனர். முதலில் 237 வழக்கறிஞர்கள் கடிதம் எழுதிய நிலையில், அதனைத் தொடர்ந்து 31 மூத்த வழக்கறிஞர்கள் கொலிஜியத்துக்கு கடிதம் எழுதினர். அதே கோரிக்கையை வலியுறுத்தி மெட்ராஸ் பார் அசோசியேஷனில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
அதைத் தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள ஆவின் நுழைவு வாயில் அருகே வழக்கறிஞர்கள் அமைதி வழியில் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில் வழக்கறிஞர்கள் பலர் பங்கேற்று தலைமை நீதிபதியை இடமாற்றம் செய்யக் கூடாது என வலியுறுத்தினர்.
கடந்த 15ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜியை மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றும் கொலிஜியத்தின் பரிந்துரைக்கு இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார். இதையடுத்து, மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்ட தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி அமர்வில் வழக்குகள் பட்டியலிடப்பட்ட நிலையில் தற்போது சாலை மார்க்கமாக கொல்கத்தா புறப்பட்டார். பிரிவு உபசார விழாவைப் புறக்கணித்த அவர், வீட்டைக் காலி செய்து கொல்கத்தா புறப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.