திண்டுக்கல் - பழநி சாலையில் முத்தனம்பட்டி அருகே செயல்பட்டு வரும் தனியார் நர்சிங் கல்லூரியின் தாளாளர் ஜோதிமுருகன், கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அக்கல்லூரியில் பயிலும் 3 மாணவிகள் திண்டுக்கல் தாடிக்கொம்பு போலீசில் புகார் செய்தனர். இந்தப் புகாரின் அடிப்படையில் கல்லூரி தாளாளர் ஜோதிமுருகன், கல்லூரி விடுதி காப்பாளர் அர்ச்சனா உள்ளிட்ட மேலும் சிலர் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும் கல்லூரியின் விடுதி காப்பாளர் அர்ச்சனா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனிடையே போலீசாரால் தேடப்பட்டு வந்த கல்லூரி தாளாளர் ஜோதி முருகன், கடந்த 23-ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டம், போளூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை 26ஆம் தேதி நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டர். அதையடுத்து ஜோதி முருகன், வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் நீதிமன்ற காவல் முடிவடைந்து, ஜோதி முருகன் திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள மகிளா நீதிமன்றத்தில் நீதிபதி புருஷோத்தமன் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்.
அதையடுத்து திண்டுக்கல் தாடிக்கொம்பு போலீசார், ஜோதிமுருகனை 7 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கேட்டு மனு செய்தனர். அந்த மனுவை விசாரித்த நீதிபதி புருஷோத்தமன் மூன்று நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தார். அதன்படி மூன்று நாட்கள் காவல் முடிந்து இன்று திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அதனைத் தொடர்ந்து விசாரணையில், வரும் டிசம்பர் 10 ஆம் தேதி வரை பழனி கிளை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்பேரில் பழனி சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.