மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிப்பதற்கு, நிர்வாகியை நியமிக்கக்கோரிய வழக்குகளில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுடைய, 913 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்துகளை நிர்வகிக்க, நிர்வாகியை நியமிக்கக்கோரி சென்னையை சேர்ந்த அதிமுக உறுப்பினர்கள் புகழேந்தி, ஜானகிராமன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கில், ஜெயலலிதாவின் உறவினர்களான ஜெ.தீபா, தீபக் ஆகியோர் சேர்க்கப்பட்டு, அவர்களும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்திருந்தனர். மேலும் வருமான வரி பாக்கி 40 கோடி ரூபாய் இருப்பதாக வருமானவரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கின் வாதங்கள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பை நீதிபதி கிருபாகரன் மற்றும் அப்துல்குத்தூஸ் அமர்வு, கடந்த ஆகஸ்ட் 30-ஆம் தேதி, தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்திருந்தது. இந்த வழக்குகளில், நீதிபதிகள் காணொலி காட்சி மூலம் 27.05.2020 புதன்கிழமை தீர்ப்பளிக்கின்றனர்.
புதன்கிழமை தீர்ப்பு என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வழக்கு நிலுவையில் இருக்கும்போதே வேதா நிலையத்தை அரசுடைமையாக்க அவசர சட்டத்தை தமிழக அரசு பிறப்பித்தது தொடர்பாக, ஜெ.தீபா அல்லது ஜெ.தீபக் தரப்பில் முறையிட வாய்ப்புகள் உள்ளன. அப்படி முறையிடப்படும் பட்சத்தில் அந்த கோரிக்கை தொடர்பாக, நீதிமன்றம் அனுமதிக்கும் பட்சத்தில் அதன் மீதான விசாரணை நடைபெற வாய்ப்புள்ளது.