மணல் திருடர்களுடன் கூட்டு சேர்ந்து மது குடித்த இடத்தில் வாக்கி டாக்கியை மணல் திருடர்களிடமே பறிகொடுத்துவிட்டு மது போதையில் விழுந்து எழுந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார் சட்ட ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய தலைமைக் காவலர். தலைமைக் காவலருக்கு மது ஊற்றிக் கொடுத்துவிட்டு அவரிடம் இருந்த வாக்கி டாக்கியைத் திருடிய 4 மணல் திருடர்களைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் காவல் நிலையத்தில் பணியாற்றுபவர் தலைமைக் காவலர் அன்பழகன். இவர், அப்பகுதி மணல் திருடர்களிடம் அடிக்கடி பேசிக்கொண்டிருப்பவர். சம்பவ நாளிலும் சில மணல் திருடர்களிடம் பேசியுள்ளார். யாரும் இவரைக் கவனிக்கவில்லை. அதன் பிறகு வழக்கமாக சிக்காத திருட்டு மணல் வாகனம், சம்மட்டி விடுதி காவல் எல்லையில் சிக்கிக்கொண்டது. அதன் பிறகு சிறிது நேரத்தில் தலைமைக் காவலர் அன்பழகனை ஒரு பேக்கரிக்கு அருகே வரச்சொல்லி அழைத்த மணல் திருடும் கும்பல், “உங்களுக்கு மாமூல் கொடுக்கவில்லை என்று எங்கள் வாகனத்தைச் சிக்கவைத்துவிட்டீர்கள். நீங்களே மீட்டுக் கொடுங்கள்” என்று கேட்டவர்கள், கூடவே மது விருந்தும் நடத்தியுள்ளனர். மது போதை அதிகமான நேரத்தில் மணல் வாகனம் மீட்கப்படாமல் போனதால் காவல்துறையிடம் இருந்த வாக்கி டாக்கியை அவருக்கே தெரியாமல் திருடி வைத்துக்கொண்டனர்.
வாக்கி டாக்கி திருடப்பட்டது தெரியாமல் அங்கிருந்து சென்ற தலைமைக் காவலர் அன்பழகன், மோட்டார் சைக்கிளிலிருந்து கீழே விழுந்து காயமடைந்துள்ளார். இந்த சம்பவம் பற்றித் தெரியாத கீரனூர் காவல் நிலைய காவல்துறையினர் அன்பழகனைத் தேடிக் கண்டுபிடித்து வாக்கி டாக்கி பற்றி கேட்க, அதன் பிறகே வாக்கி டாக்கி காணாமல்போனது தெரிந்திருக்கிறது தலைமைக் காவலருக்கு. உடனே அன்பழகனை மருத்துவமனையில் சேர்த்த போலீசார், அவருடன் மது குடித்த 4 பேரைத் தேடிப் பிடித்து விசாரித்தபோது, சம்மட்டி விடுதியில் பிடிபட்ட மணல் வாகனத்தை மீட்பதற்காக அன்பழகனை அழைத்துச் சென்றோம். ஆனால் வாகனத்தை மீட்டுத்தரவில்லை. அதனால் எங்களுடன் சேர்ந்து மது குடிக்க வைத்து அவரிடம் இருந்த வாக்கிடாக்கியை அவருக்கே தெரியாமல் திருடி பெங்களூருவில் ஒரு குவாரி மணலில் புதைத்து வைத்திருப்பதாகக் கூறி வாக்கி டாக்கியை எடுத்துக் கொடுத்துள்ளனர்.
சம்பவம் குறித்து கீரனூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பிரகாஷின் புகாரின் பேரில் மாத்தூர் காவல் ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் வழக்குப் பதிவுசெய்து இன்பசுரேஷ், முகேஷ் கண்ணன், சீனிவாசன், செந்தில் ஆகிய நான்கு பேரை கைது செய்தார். இதில் முகேஷ் கண்ணன், அதிமுக ஐ.டி. விங்க் பிரமுகராவார் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.