சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சுரங்கவியல் பட்டய படிப்பு பயின்ற மாணவர்களுக்கு வேலை வாய்ப்புக்கான நேர்காணல் நிகழ்ச்சி பொறியியல் புல வளாகத்தில் திங்கள்கிழமை(26.8.204) நடைபெற்றது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம், நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்க நிறுவனத்துடன் செய்து கொண்ட கல்வி புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில், பல்கலைக்கழக பொறியியல் புல வளாகத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் மாணவ, மாணவியர்களுக்கு சுரங்கவியல் பட்டய படிப்பு வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் இங்கு சுரங்கவியல் பட்டயபடிப்பு பயின்ற மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதில் ஆண்டு தோறும் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திற்கு நிலம் கொடுத்த குடும்பத்தைச் சேர்ந்த 30 மாணவர்களுக்கும், பொது பட்டியலில் உள்ள 30 மாணவர்களுக்கும் பட்டயப்படிப்பு வழங்கப்பட்டு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தற்போது 2023 - 2024 கல்வி ஆண்டில் பயின்ற மாணவர்கள் 60 பேர் மற்றும் கடந்த ஆண்டு பயின்ற மாணவர்கள் 32 பேர் உள்ளிட்ட 92 மாணவர்களுக்கு வேலைவாய்ப்பிற்கான நேர்காணல் பல்கலைக்கழக பொறியியல் துறை வளாகத்தில் உள்ள சுரங்கவியல் பட்டய படிப்பு துறை வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. நேர்காணலுக்குப் பல்கலைக்கழக சுரங்கவியல் பட்டய படிப்பு துறை இயக்குநர் சி.ஜி.சரவணன் முன்னிலை வகித்தார். என்.எல்.சி இந்தியா லிமிடெட் நிறுவன வேலைவாய்ப்பு துறை அதிகாரிகள் பங்கேற்று நேர்காணல் நடத்தி மாணவர்களைத் தேர்வு செய்தனர். நேர்காணலில் பங்கேற்ற அனைவருக்கும் 2 ஆண்டுகள் பயிற்சியுடன் கூடிய பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.