தமிழ்நாட்டில் அதிகமான வாடிவாசல்களைக் கொண்டுள்ளது புதுக்கோட்டை. எந்த ஊர் ஜல்லிக்கட்டுக்கு போனாலும், புதுக்கோட்டை மாவட்ட காளைகள் கெத்துக் காட்டும். கடந்த சில வருடங்களில் மதுரை வாடிவாசல்களில் சுற்றிச் சுழன்று நின்று விளையாடிய காளைகள் பொன்னமராவதி காளை, பளுதூக்கும் வீராங்கனை அனுராதா எஸ்.ஐ.யின் காளை, மாஜி அமைச்சர் விஜயபாஸ்கரின் கொம்பன் என பல காளைகள் வரிசைக்கட்டி புதுக்கோட்டைக்கு புகழை சேர்த்துள்ளது.
இந்த வரிசையில் தான் இன்று (17/01/2022) அலங்காநல்லூரில் நடந்த ஜல்லிக்கட்டில் புதுக்கோட்டை தமிழ்செல்வனின் காளை முதல் பரிசை வென்று காரை வாங்கி புதுக்கோட்டை ஜல்லிக்கட்டு புகழை நிலைநிறுத்தியிருக்கிறது. திருச்சி சூரியூரிலும் இந்த தமிழ்செல்வனின் காளையே முதல் பரிசாக புல்லட் வாங்கி வந்தது. இப்படியே பல ஜல்லிக்கட்டு களங்களைக் கலக்கி வருகிறது காளைகள்.
அதேபோல், புதுக்கோட்டை மாவட்டம், வன்னியன்விடுதியில் இன்று (17/01/2022) நடந்த ஜல்லிக்கட்டில் 665 காளைகள் பங்கேற்றது. ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர்கள் ரகுபதி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
மாலை வரை நடந்த ஜல்லிக்கட்டில் சிறந்த மாடாக பொற்பனைக்கோட்டை எம்.எஸ்.கே காளை தேர்வு செய்யப்பட்டு பரிசு வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அதிக காளைகளைப் பிடித்த திருக்கானூர்பட்டி சோழதேசம் நண்பர்கள் குழுவைச் ஆனந்துக்கும் மற்றும் இரண்டாம் பரிசு பள்ளத்துப்பட்டி சுப்பிரமணிக்கும், மூன்றாம் பரிசு சூரியூர் சிவாவுக்கும் வழங்கப்பட்டது.