பொங்கல் திருவிழாவையொட்டி, மதுரை மாவட்டம், அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்போட்டியை அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர். இன்று (14/01/2022) மாலை 04.00 மணி வரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு காளைகள் வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்தன.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 500 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். மாடுபிடி வீரர்களுக்கு இரண்டு டோஸ் தடுப்பூசி சான்று, கோவிட் நெகட்டிவ் சான்று கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு காளையுடன் உரிமையாளர், உதவியாளர் என இரண்டு பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், காளையின் உரிமையாளர், உதவியாளர் இருவருக்கும் 2 டோஸ் தடுப்பூசி, கரோனா நெகட்டிவ் சான்று அவசியம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாநகர காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா தலைமையில் 1,300 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மாடுபிடி வீரர்களுக்கு காயம் ஏற்பட்டால் சிகிச்சையளிக்க 50 பேர் கொண்ட மருத்துவக் குழு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் சிறந்த காளைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் கார் பரிசாக வழங்கப்படவுள்ளது. சிறந்த மாடுபிடி வீரருக்கு உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. சார்பில் இரு சக்கர வாகனம் பரிசாக வழங்கப்படவுள்ளது. வெற்றி பெறும் காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் சைக்கிள், கட்டில், பீரோ உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் தரப்படும்.
ஜல்லிக்கட்டைக் காண உள்ளூரைச் சேர்ந்த 150 பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும், ஜல்லிக்கட்டு போட்டியைக் காண வரும் பார்வையாளர்கள் இரண்டு டோஸ் கரோனா தடுப்பூசியைப் போட்டிருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதற்கான சான்று வைத்திருப்பவர்கள் மட்டுமே போட்டியைக் காண அனுமதிக்கப்பட்டனர்.
அனுமதிக்கப்பட்ட இருக்கைகளில் 50% என்ற எண்ணிக்கையில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவர். வெளியூரில் வசிப்பவர்கள் ஜல்லிக்கட்டு நிகழ்வுகளை தொலைக்காட்சி மற்றும் இணையவழி மூலம் காணலாம்.
இதனிடையே, அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் முதல் சுற்று நிறைவடைந்த நிலையில், மொத்தம் 67 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. முதல் சுற்று முடிவில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள், மாட்டின் உரிமையாளர்கள் என 5 பேர் காயமடைந்தனர். மாடு முட்டியதில் படுகாயமடைந்த இரண்டு மாடுபிடி வீரர்கள் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.