தமிழக சட்டப்பேரவையில் கடந்த 13ஆம் தேதி பொது பட்ஜெட்டும் அதற்கடுத்த நாளான 14ஆம் தேதி வேளாண்மைக்கான தனி பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்று வருகிறது. பட்ஜெட் கூட்டத்தொடரில் கடந்த 26/08/2021 அன்று பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறை மீதான விவாதம் நடைபெற்றது. இதில், அரசுப் பள்ளி மாணவர்களுக்குத் தொழிற்கல்வி படிப்புகளில் 7.5% உள்ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதாவை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேரவையில் தாக்கல் செய்தார்.
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரிலான பல்கலைக்கழகத்தை திமுக அரசு முடக்குவதாக தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார். இந்நிலையில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்துடன் ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை இணைக்கும் சட்ட முன்வடிவு நாளை சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட இருக்கிறது. இதற்கான சட்ட முன்வடிவை தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்ய இருக்கிறார்.
தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடரில் கடந்த 28/08/2021 அன்று மத்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான தனி தீர்மானத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொண்டுவந்த நிலையில் அதிமுக, பாஜக பேரவையை வெளிநடப்பு செய்திருந்தது குறிப்பிடத்தகுந்தது.