கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், பொது விநியோக திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து உணவுப் பொருள் வழங்கல் துறை, கூட்டுறவுத் துறை மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கி பொதுவிநியோகத் திட்ட ஒதுக்கீடு, நகர்வு, நுகர்வு மற்றும் புதிய குடும்ப அட்டைகள் வழங்குதல் ஆகியவை குறித்து ஆய்வுசெய்தார்.
பின்னர் அவர் கூறுகையில், “கடலூர் மாவட்டத்தில் 1,470 நியாய விலைக் கடைகள் மூலம் 7,50,491 குடும்ப அட்டைதாரர்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கப்படும் செயல்பாட்டினை துறை அலுவலர்கள் தீவிரமாக கண்காணித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும். ரேஷன் பொருட்கள் வெளிச்சந்தையில் விற்கப்படுவது, வீட்டு உபயோக எரிவாயு வெளிச்சந்தையில் விற்கப்படுவது ஆகியவற்றை முற்றிலும் தடுக்க வேண்டும். மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின்படி சோதனைகளில் ஈடுபடும் அதிகாரிகளின் செயல்பாடுகள் குறித்து மக்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்படுத்தும் விதத்தில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
நியாய விலைக் கடையில் பணிபுரியும் ஊழியர்கள் குறிப்பிட்ட நேரத்தில் கடையைத் திறப்பது குறித்தும், ஊரடங்கு காலங்களில் பொது மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கத்துடனும் செயல்படுவது குறித்தும், பயனாளிகள் தனிமனித இடைவெளியைப் பின்பற்றுவது, முகக்கவசம் அணிவது போன்ற வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி நியாயவிலைக் கடையில் பொருட்கள் பெற்று செல்வதை உறுதிசெய்ய வேண்டும். முகக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்கக்கூடாது. இந்த நடவடிக்கைகளை வட்ட வழங்கல் அலுவலர்கள் மற்றும் கூட்டுறவு சார் பதிவாளர்கள் கண்காணிக்க வேண்டும். இதனைப் பின்பற்றாதவர்கள் மீது தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்றார்.