"மீண்டும் நான் கட்சிக்கு வருவேன் கண்டிப்பா கட்சியை சரி பண்ணிடலாம். தைரியமா இருங்க கரோனா முடிஞ்சதும் நான் வந்துடுவேன். குடும்பத்தோட ஜாக்கிரதையாக இருங்க நிச்சயம் வந்துடுவேன்" என்று சசிகலா ஒரு அதிமுக தொண்டர் ஒருவரிடம் பேசிய அந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. மீண்டும் சசிகலா வரப்போகிறார் கட்சியை கைப்பற்றப் போகிறார் என்ற பேச்சும் பரபரப்பாக அடிபடத் தொடங்கியுள்ளது.
இந்தநிலையில் சசிகலாவிடம் ஃபோனில் பேசிய அந்த அதிமுக தொண்டரை தேடியபோது, அவர் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி தொகுதி, செங்கமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த தெற்கு ஒன்றிய ஐடி விங்க் துணை அமைப்பாளர் வினோத் என்பது தெரிய வந்தது. அவரை அவரது வீட்டிலேயே சந்தித்து பேசினோம். இதுகுறித்து நம்மிடம் பகிர்ந்து கொண்ட வினோத்,
''நான் அதிமுக ஐடி விங்கில் இருந்தாலும் கட்சி நிலவரம் பற்றி அடிக்கடி சசிகலாவுக்கு கடிதம் எழுதுவேன். அதற்கு பதிலும் வரும்,
இந்நிலையிலதான் நேற்று திடீரென ஒரு ஃபோன் வந்தது. சின்னம்மா பேச போறாங்கன்னு சொன்னதும் என்னால நம்ப முடியல. ஆனால் கொஞ்ச நேரத்துல சின்னம்மா பேசினாங்க. எனக்கு எல்லையில்லா மகிழ்ச்சியாக இருந்தது. மீண்டும் கட்சிக்கு வந்து வழிநடத்தனும் என்று சொன்னேன். கரோனா முடிந்ததும் வருவதாக சொன்னார். அவர் வந்து ஒற்றைத் தலைமையின் கீழ் கட்சி வரவேண்டும் என்பதே என்னைப் போன்ற அதிமுக தொண்டர்களின் விருப்பம் அதை சின்னம்மா விரைவில் நிறைவேற்றுவார்.
அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்தாரே சசி என்ற கேள்விக்கு,
''காலச்சூழ்நிலை அப்படி இருந்தது. ஆனால் இப்பொழுது தேர்தல் முடிவுகளைப் பார்க்கும்போது கட்சி ஒற்றுமையாக இருந்திருந்தால் 3 வது முறையாக அதிமுக ஆட்சிக்கு வந்திருக்கும்''என்றார்.
சசிகலாவுடன் பேசியதால் அதிமுக நடவடிக்கை எடுக்காதா என்ற கேள்விக்கு,
''சின்னம்மா வெளியே வரும்போதே போஸ்டர் ஒட்டினேன். எந்த நடவடிக்கையும் இல்லையே. இப்போதும் என்னிடம் யாரும் கேட்கலயே. சின்னம்மா தலைமை ஏற்று கட்சியை வழிநடத்த வருவார். கட்சி மீண்டும் ஒன்றிணைந்து வலுப்படும்'' என நம்பிக்கையோடு பேசினார்.