அரசு வேலைக்கு நடத்தப்படும் தேர்வுகளான டி.என்.பி.எஸ்.சி போட்டி தேர்வுகளில் தமிழ்மொழி தாளை கட்டாயமாக்கி தமிழக அரசு நேற்று அரசாணை வெளியிட்டது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) நடத்தும் குரூப்-1, குரூப்-2, குரூப்-2 ஏ, குரூப்-3, குரூப்-4 ஆகிய தேர்வுகளில் பொதுத்தமிழ் மற்றும் பொது ஆங்கிலம் தாள்களில் ஆங்கிலம் நீக்கப்பட்டு தமிழ்மொழி தாள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கான தமிழ்மொழி தாள் பாடத்திட்டம் 10 ஆம் வகுப்பு தரத்தில் அமையும் என்றும், அதில் குறைந்தபட்சம் 40 விழுக்காடு மதிப்பெண் பெற வேண்டும் என்றும் வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்மொழி தாளில் தேர்ச்சி பெறாவிட்டால் பிற தாள்கள் மதிப்பீடு செய்யப்படாது என்ற வழிகாட்டுதலும் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் விரைவில் டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளுக்கான அறிவிப்பாணை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆங்கில வழியில் பயின்றவர்கள் அரசின் இந்த அரசாணையை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருப்பதாகக் கூறப்படும் நிலையில், அரசின் இந்த அரசாணை குறித்து தமிழக நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் விளக்கமளித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ''அனைவருக்கு சமமான வாய்ப்பு கிடைக்கும் நிலை இதனால் உருவாகும். முனைவர் பட்டம் பெறும் அளவுக்கு தமிழ் ஃபில்டர் கிடையாது. 10 ஆம் வகுப்பு அளவிற்கு 40 சதவிகிதம் பாஸ் மார்க் இருந்தால் போதும். ஆங்கில வழியில் பயின்றவர்கள் இந்த அரசாணையை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடருவது அவர்களது தனிப்பட்ட உரிமை'' என்றார்.