வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி இன்றுவரையிலும் விவசாயிகள் டெல்லி எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்த நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 19.11.2021 அன்று மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக அறிவித்தார். மேலும்> புதிய வேளாண் சட்டங்களை முறைப்படி திரும்பப் பெற நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவித்தார்.
இந்நிலையில், மூன்று வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படுவதாக பிரதமர் அறிவித்த பின்னும் போராட்டத்தை தொடர்வது குறித்து ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் கே. பாலகிருஷ்ணன் சென்னை பத்திரிகையாளர்கள் மன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “விவசாயி விரோத 3 வேளாண் சட்டங்களைக் கடந்த நவம்பர் 19 அன்று பிரதமர் ரத்து செய்வதாக அறிவித்த நிலையில், சம்யுக்த கிசான் மோர்ச்சா ஏற்கனவே அறிவித்தபடி போராட்டங்கள் தொடர்ந்து நடைபெறும் என்று அறிவித்துள்ளது. விவசாயிகளைப் பொறுத்தவரையில் விவசாயிகளின் வருமானத்தை நான்கு ஆண்டுகளில் இரட்டிப்பாக்குவோம்.
அனைத்து விளைபொருட்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் செய்யப்படும் போன்ற எந்த வாக்குறுதிகளையும் பிரதமர் நரேந்திர மோடி நிறைவேற்றவில்லை. எனவே பிரதமரின் அறிவிப்பை விவசாயிகள் ஏற்றுக்கொள்வதில் சிரமம் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், போராட்டத்தைத் தொடங்கும்போது வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட வேண்டும் என்பதோடு மேலும் இரண்டு முக்கிய கோரிக்கைகளையும் விவசாயிகள் முன்வைத்திருந்தார்கள். மின்சார சட்டத் திருத்த மசோதா 2020 திரும்பப் பெறப்பட வேண்டும்; அனைத்து விளைபொருட்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் செய்யப்படுவதோடு, அதை உத்தரவாதப்படுத்த சட்டம் இயற்றப்பட வேண்டும்.
தற்போது பிரதமர் 3 கோரிக்கைகளில் முதல் கோரிக்கையான வேளாண் சட்டடங்களை இரத்து செய்வதாக, அதுவும் விவசாயிகளோடு பேச்சுவார்த்தை நடத்தாமல் அவராகவே அறிவித்திருக்கிறார். மற்ற இரண்டு கோரிக்கைகளும் நிலுவையில் உள்ளன. மேலும் இந்தப் போராட்டக் களத்தில் சுமார் 700 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். மத்திய அரசு நினைத்திருந்தால் உயிரிழப்புகளைத் தவிர்த்திருக்கலாம். உயிரிழந்த குடும்பங்களுக்குத் தக்க இழப்பீடு அளிக்கப்பட வேண்டும். நாடு முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்ட விவசாயிகள் மீது பதியப்பட்டுள்ள வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும்.
லக்கிம்பூர் கேரி விவசாயிகள் படுகொலையின் சூத்திரதாரியான மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ரா பதவி நீக்கம் செய்யப்பட்டு, கைது செய்யப்பட வேண்டும். நேற்று (22.11.2021) விவசாயிகளின் மகாபஞ்சாயத்து லக்னோவில் நடைபெற்றது. அதில், 26.11.2021 அன்று போராட்டத்தின் ஓராண்டு நிறைவு தினம் நாடு முழுவதும் நினைவுக்கூறப்படும் எனவும், 29.11.2021 முதல் நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற குளர்கால கூட்டத்தொடரின்போது டிராக்டர்களில் பேரணியாகச் சென்று போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். நவம்பர் 26 அன்று மாவட்ட தலைநகர்களில் தொழிலாளர்களோடு இணைந்து பேரணிகள் நடத்தவும், அன்று மாலை 4 மணிக்கு வள்ளுவர் கோட்டத்தில் ஓராண்டு நினைவு தின பொதுக்கூட்டம் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது” என்றார்.