எத்தனை விழிப்புணர்வு வேலைகள் நடந்தாலும் பேராசையில் ஏமாறுபவர்கள் ஏமாந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
தூத்துக்குடியின் முத்தையாபுரம் பகுதியைச் சேந்த தங்கம், நில புரோக்கராகச் செயல்படுபவர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தூத்துக்குடி தாளமுத்து நகர் பகுதியைச் சேர்ந்த மரியதாஸ், கதிர்வேல் நகரின் முருகன் இருவரும் தங்கத்திடம் அறிமுகமானார்கள். அப்போது, தங்களது நண்பர்களான காரைக்குடியின் கண்டனூரைச் சேர்ந்த வைத்தியலிங்கம், முதுகுளத்தூர் பகுதியின் முத்துராமலிங்கம் இருவரும் தங்கம் வைரங்களைக் காட்டிலும் விலைமதிப்புள்ள இரிடியம் வைத்திருப்பதாகவும், அதன் விலை பல கோடிகள் மதிப்புகளைக் கொண்டது எனவும் கூறியுள்ளனர். வெளியே எவருக்கும் தெரியாமல் விற்றுக்கொடுத்தால் நல்ல தொகை கமிசனாகக் கிடைக்கும் என்று ஆசை காட்டியிருக்கிறார்கள்.
பேச்சுப்படி தங்கம், தனது மகன் வினோத் குமாருடன் கடந்த 26ம் தேதி நகரின் எட்டயபுரம் சாலையில் அவர்கள் வரச் சொன்ன இடத்திற்குப் போயிருக்கிறார்கள். அங்கே மரியதாசும் முருகனும் இருக்க, சற்று நேரத்தில் ஒரு ஆடம்பரக் காரில் வைத்தியலிங்கம், முத்துராமலிங்கம் இருவரும் வந்திருக்கின்றனர். அவர்கள் தங்களிடமிருந்த 6 பேட்டரி ஃப்யூஸ் போன்ற குப்பிகளைக் காட்டி இது திரவ வடிவிலான இரிடியம், விலை அதிகம் கொண்டது. என்று சொல்ல அதைப் பார்த்ததும் சந்தேகப்பட்ட புரோக்கர் தங்கம், அந்தப் பொருளைத் தன்னால் விற்றுத்தர முடியாது என்று சொல்லிவிட்டுக் கிளம்பியிருக்கிறார். ஆனால் அந்தக் கும்பலோ அரிவாளைக் காட்டி தங்கத்தைக் கொலைமிரட்டல் விடுத்திருக்கிறது.
சமயோஜிதமாக அவர்களிடமிருந்து தப்பிய தங்கமும் அவரது மகனும், இந்தச் சம்பவம் குறித்து சிப்காட் பகுதியின் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க இன்ஸ்பெக்டர் முத்து சுப்பிரமணியம், எஸ்.ஐ.களான சங்கர், நம்பிராஜன் உள்ளிட்ட போலீஸ் டீம் இந்த மோசடி கும்பலை அலசியதில் அவர்கள் தூத்துக்குடியின் வட்டக் கோவில் பகுதியில் சென்றபோது வளைத்துள்ளனர்.
அவர்களிடமிருந்து 6 சிறிய ஃப்யூஸ் திரவக் குப்பிகள் மற்றும் ஆயுதங்களைக் கைப்பற்றியவர்கள் வைத்தியலிங்கம், முத்துராமலிங்கம், மரியதாஸ், முருகன் நான்கு பேரையும் கைது செய்து, மோசடி கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
இவர்களில் கைதான முத்துராமலிங்கம், ராமநாதபுரம் மாவட்டம் பகுதியின் அ.ம.ம.மு.க.வின் ஒன்றியச் செயலாளர் பொறுப்பிலிருப்பவர். இந்த இரிடியம் திரவத்தின் ஒரு மில்லி கிராம் ரூ.1 கோடி விலை. மொத்தம் 6 குப்பிகளிலும் 144 மில்லிகிராம் கொண்டது ரூ.144 கோடி மதிப்புள்ளது. தஞ்சாவூரிலுள்ள ஒரு பெரிய பார்ட்டி கொடுத்ததாகச் சொல்லி பேரத்தில் ஈடுபட்டவர்கள், நகரில் வேறு சிலரையும் அணுகி காரியம் படியாமல் போனதையும் சொல்லியிருக்கிறார்கள்.
இந்தத் திரவம் இரிடியம்தானா, என்பதைக் கண்டறிய ஆய்வகத்திற்கு அனுப்பியுள்ளோம். ஆய்வறிக்கை வந்த பிறகே அது எந்த வகை திரவம் என்பது தெரியவரும் என்கிறார் தூத்துக்குடி எஸ்.பி.யான ஜெயகுமார்.