திரைப்பட இயக்குநர் சுசி கணேசனுக்கு எதிராக ஆதாரமில்லாத கருத்துக்களை வெளியிட்டதாக கவிஞர் லீனா மணிமேகலை மற்றும் பாடகி சின்மயிக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
கவிஞர் லீனா மணிமேகலை, சின்மயி ஆகியோர் சமூக வலைத்தளங்களில் திரைப்பட இயக்குநர் சுசி கணேசன் மீது குற்றச்சாட்டுகளை தெரிவித்து வந்தனர். இதுகுறித்து லீனா மணிமேகலைக்கு எதிராக இயக்குநர் சுசி கணேசன் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். 'தனக்கு எதிரான உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுக்களை லீனா மணிமேகலை பரப்பி வருவதாகவும், அவற்றின் உண்மைத்தன்மையை ஆராயாமல் ஃபேஸ்புக், கூகுள், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களும், சமூக ஊடகங்களும் வெளியிட்டதாகவும், இதற்கு தடை விதிக்க வேண்டும். தன்னைப் பற்றி அவதூறு கருத்துக்களை வெளியிட்டதற்கு ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடாக தர வேண்டும்' என இயக்குநர் சுசி கணேசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கில் சுசி கணேஷன் சார்பில் ஆஜராகியிருந்த வழக்கறிஞர், 'கவிஞர் லீனா மணிமேகலை மீது தொடரப்பட்ட கிரிமினல் அவதூறு வழக்கு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. தங்கள் தரப்பை பழிவாங்கும் நோக்கில் லீனா மணிமேகலை, சின்மயி உள்ளிட்டோர் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வைக்கின்றனர். அடுத்த படத்தில் இசையமைப்பாளர் இளையராஜாவுடன் இணைய உள்ள நிலையில் திரைத்துறையில் எனது நட்பை கெடுக்கும் வகையில் உண்மைக்குப் புறம்பான தகவல்களைப் பரப்பி வருவதாகவும்' வாதம் செய்தார்.
இந்த வழக்கில் முகாந்திரம் இருப்பதாகக் கூறிய நீதிபதிகள், சுசி கணேஷன் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வெளியிட்ட லீலா மணிமேகலை, சின்மயி ஆகியோருக்கு சுசி கணேசன் தொடர்பான ஆதாரமற்ற தகவல்களை வெளியிட இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார். அதேபோல் இந்த வழக்கில் கவிஞர் லீனா மணிமேகலை, சின்மயி மற்றும் கூகுள், ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற நிறுவனங்கள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை 4 வாரங்களுக்குத் தள்ளிவைத்தார்.