திண்டுக்கல் நத்தம் சாலையில் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் ஆண், பெண் இருபாலருக்கும் என தனித்தனியாகத் தொழிற்பயிற்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. இதனைத் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.கணேசன், தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பயிலும் மாணவர்களுக்கு இடவசதி, குடிநீர் வசதி, ஆய்வக வசதி, கட்டமைப்பு வசதி, பயிற்சி மையம், வகுப்பறைகள் ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர். மாணவர்கள் மத்தியில் கலந்துரையாடினர். பின்னர் ஆய்வுக் கூடங்களுக்குச் சென்று இயந்திரங்கள் இயங்குவது தொடர்பாக மாணவர்களிடம் கேட்டறிந்தனர்.
அப்பொழுது கம்ப்யூட்டர் உதவியுடன் இயங்கக்கூடிய இயந்திரத்தை இயக்குமாறு பயிற்றுநரிடம் அமைச்சர் கூறினார். ஆனால் இயந்திரத்தைச் சரியாக இயக்க தெரியாமல் தடுமாறிக்கொண்டிருந்த பயிற்றுநர் கோ.பாலகிருஷ்ணனுக்குக் கல்லூரி முதல்வரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப அமைச்சர் உத்தரவிட்டார். அதன் பின் அமைச்சர் கணேசன் பத்திரிகையாளர்களிடம் பேசும்போது, “தமிழ்நாட்டில் மொத்தம் 90 தொழில் பயிற்சி பள்ளிகள் உள்ளன. இந்த 90 தொழில் பயிற்சி பள்ளிகளில் நேரடியாக ஆய்வு செய்து அங்குப் பயிலும் மாணவர்களுக்கு இட வசதி, குடிநீர் வசதி, ஆய்வக வசதி, கட்டமைப்பு வசதி இருக்கிறதா என ஆய்வு செய்தோம்.
எந்தெந்த தொழில் பயிற்சி மையங்களில் என்னென்ன தேவைகள் இருக்கிறது அவற்றை எல்லாம் முழுமையாகக் கணக்கெடுப்பு செய்து முதலமைச்சர் கவனத்திற்கு எடுத்துச்சென்று அவற்றையெல்லாம் நிறைவேற்றப்படுவதற்குத் தான் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பாக முதலமைச்சரின் நோக்கம் வருங்காலத்தில் இளைஞர்களுக்கு முழுமையான வேலை வாய்ப்பை உருவாக்கித் தர வேண்டும் என்பதே குறிக்கோளாக இருக்கிறது. இந்த ஆண்டு பயிற்சி பள்ளி முடித்து அந்த துறையின் மூலமாக ஸ்கில் டெவலப்மன்ட் என்ற புதிய துறையை உருவாக்கி அவர்கள் எல்லா இடங்களிலும் வேலை வாய்ப்பினை பெறுவதற்கு ஏதுவாக இருக்கும்” என்று கூறினார்.