நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்தின் போதே குழந்தை உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த பன்னால்கீழக்காடு பகுதியைச் சேர்ந்தவர் வீர சேகரன். இவரது மனைவி திருமுருகப்பிரியா நான்கு நாட்களுக்கு முன் தலைப்பிரசவத்திற்காக வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். குழந்தைக்கு தொப்புள் கொடி சுற்றி இருந்ததால் நாகப்பட்டினம் அரசு மருத்துவக்கலூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு கூறியுள்ளனர். நாகை அரசு மருத்துவமனையில் சுகப்பிரசவம் செய்யலாம் என மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்யாமல் தாமதித்ததாகக் கூறப்படுகிறது.
சிறிது நேரத்தில் திருமுருகப்பிரியாவிற்கு அவசரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அறுவை சிகிச்சை முடித்து வந்த மருத்துவர்கள் குழந்தையின் உறவினர்களிடம், அறுவை சிகிச்சையின் போது குழந்தை உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதை ஏற்காத குழந்தையின் உறவினர்கள் மருத்துவர்களின் அலட்சியத்தால் தான் குழந்தை உயிரிழந்து விட்டதாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து குழந்தையின் உறவினர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “இந்த மருத்துவமனைக்கு வந்த அடுத்த நாளே இவர்களிடம் அறுவை சிகிச்சை செய்துவிடுங்கள் என சொன்னேன். கொடி சுற்றியுள்ளது, ரத்த அழுத்தம் உள்ளது என சொன்னார்கள். அறுவை சிகிச்சை செய்துவிடுங்கள் என சொன்னேன். அதற்கு அவர்கள் உங்கள் இஷ்டத்திற்கு செய்யமுடியாது சுகப்பிரசவத்திற்கு முயற்சி செய்யலாம் என சொன்னார்கள். திரும்ப திரும்ப கேட்டதற்கு எங்களை விரட்டித் தான் விட்டார்கள்.
இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளோம். அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்று இனிவரும் குழந்தைகளுக்கு நடக்கக்கூடாது" எனக் கூறினார்.